4171. பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப்
புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
செறியும்உப காரியங்களாம் சக்திகளும் அவரைச்
செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க
அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும்
ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே
நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே.
உரை: கண் முதலிய பொறிகள், மனம் முதலிய கரணங்கள் முதலாகிய தத்துவங்கள் பலவும், அத் தத்துவங்களை விரும்பி இயக்குகின்ற பூரணராகிய தேவர்களும், அவர்களுக்குக் கூடி உதவும் உபகாரிகளாகிய சத்திகளும், அச் சத்திகளைத் தொழிற்படுத்துகின்ற சத்தர்களும் தன் அருளொளியால் விளக்கமுற இயங்கும்வண்ணம் அறிவறிவாகவும், அவ்வறிவுக்கு அறிவாகவும், எவ்விடத்தும் ஆனதுவாய், தானதுவாய், அதுவதுவாய் நிறைந்து உரிய நெறியில் இயலுமாறு அம்பலத்தில் அருள் நடம் புரிகின்ற கூத்தப் பெருமானே! உனக்கு அடியவனாகிய என்னுடைய சொல் மாலை நிலைபெறுமாறு நீ அணிந்தருளுவாயாக. எ.று.
தத்துவங்கள் தோறும் அவ்வவற்றை இயக்குகின்ற தேவர்கள் உளராதலால் அவர்களை, “இயக்கி நடத்துகின்ற பூரணர்” எனவும், அவரது தொழில்கள் இனிது நடைபெற உதவும் சத்திகளும் சத்தர்களும் என ஆகமங்களில் கூறப்படுதலால் அவர்களை, “அவர்க்குச் செறியும் உபகாரிகளாம் சத்திகளும் அவரைச் செலுத்துகின்ற சத்தர்களும்” எனப் பொதுப்படக் கூறுகின்றார். சத்தி சத்தர்களின் இயல்பு சிவஞான மாப்பாடியத்தில் இரண்டாம் சூத்திரம் நான்காம் அடிக் கரணத்தில் கூறப்படுவது காண்க. அவரவர் அறியும் அறிவாய் அந்த அறிவுக்கறிவாய் இடம் பெற்றுக் கலப்பால் தான் அதுவாய் அதுவதுவாய் நிறைந்து, தத்துவங்கள் முறையே தத்தமக்குரிய தொழில்களை முறைப்படச் செய்தற்கு ஏதுவாதல் விளங்க, “அறிவறிவாய் அவ்வறிவுக்கறிவாய் எவ்விடத்தும் ஆனதுவாய்த் தானதுவாய் அதுவதுவாய் நிறைந்தே நெறி வழங்க” என்று விளக்குகின்றார். (82)
|