4172. உண்ணுகின்ற உண்வெறுத்து வற்றியும்புற் றெழுத்தும்
ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
உரை: கோடிக்கணக்கான தலைமைக் குணம் படைத்தவர்கள் ஆங்காங்கு இருந்து உண்ணுகின்ற உணவைத் துறந்து, உடல் வற்றியும் தம்மைச் சூழப்புற்றெழுந்து மூடிக்கொள்ளவும் வருந்திச் செய்கின்ற பெரிய தவத்தாலும் கிடைத்தற்கரிதாய்ச் சிறிய பயல்களினும் சிறியவனாகிய எனக்குக் கிடைத்ததாகிய பெரிய பதிப்பொருளே! பொருந்துகின்ற எனது பெரிய திருவருள் அமுதத்தை எனக்களித்து என் உள்ளத்தின்கண் நானும் தானுமாய் எழுந்தருளி நான் எண்ணுகின்ற படியெல்லாம் அருள் செய்கின்ற சிவ பரம்பொருளே! விளங்குகின்ற திருநடனத்தையுடைய அருளரசே! என் சொல் மாலையை ஏற்று அணிந்து மகிழ்ந்தருளுக. எ.று.
உண்ணும் உணவைத் துறத்தலால் உடல் வற்றி மெலிந்தமை புலப்பட, “உண்ணுகின்ற ஊண் வெறுத்து வற்றியும்” எனவும், பொறி புலன்கள் உணர்வறச் செற்றமை விளங்க, “புற்றெழுந்தும்” எனவும், சலிப்பின்றிப் பெருந்தவம் புரிந்தமை விளங்க, “புற்றெழுந்தும் வருந்திப் பண்ணுகின்ற பெருந்தவம்” எனவும், இத் தவத்தாலும் சிவத்தின் திருவருள் கிடைத்தற்கரிதாயினமை புலப்பட, “பெரும் தவத்தும் கிடைப்பரிதாய்” எனவும், தமக்கு அது எளிதில் கிடைத்தமை உரைப்பாராய், “சிறிய பயல்களினும் சிறியேற்குக் கிடைத்த பெரும் பதியே” எனவும் எடுத்துரைக்கின்றார். சிவனருளை நாடித் தவம் முயன்றவர்கள் எண்ணிறந்தவர் என்றற்கு, “ஒரு கோடிப் பெருந்தலைவர்” என்று கூறுகின்றார். “புற்றுமாய் மரமாய்ப் புனல்காலே உண்டியாய் அண்ட வாணரும் பிறரும், வற்றியாரும் நின் மலரடி காணா மன்ன” (செத்தி) என மாணிக்கவாசகர் உரைப்பது ஈண்டு நினைவு கூரத்தக்கதாம். தலைவர் - தலைமைக் குணங்களையுடையவர். சிறிய பயல்கள் - மிக்க இளஞ் சிறுவர்கள். சிறியேன் சிறுமைப் பண்புடையவன். நண்ணுதல் - பொருந்துதல். நானும் தானுமாய் இருந்தோம் என்பார், “நானாகித் தானாகி அமர்ந்தருளி” எனக் கூறுகின்றார். என்னைத் தன்றன்மை உடையவனாக்கியும், தன்றன்மை கெடாது நின்றமையும் இனிது விளங்க “நானாகித் தானாகி” என்று நவில்கின்றார். என்னுள்ளே இருந்து நான் நினைப்பனவனைத்தும் நான் எய்த அருளுகின்ற சிவ பரம்பொருள் என்பாராய், “நான்தான் எண்ணுகின்றபடி எல்லாம் அருள்கின்ற சிவமே” என்று எடுத்தோதுகின்றார். (83)
|