4173.

     கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
          கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
     கள்ளம்உறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
          காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
     பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
          பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
     தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
          தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

உரை:

     மிகுதியான வினைப் பெருக்கத்தால், உண்டாகிய பலவேறு சமய வகைகளும் அவற்றிடத்தே ஓதப்படுகின்ற சாத்திரங்களும், கள்ளம் பொருந்துகின்ற அச் சாத்திரங்கள் கூறுகின்ற பல்வகைக் கதிகளும் ஞானங்களும், அவற்றைத் தரும் தெய்வங்களும் எல்லாம் சிறு பிள்ளைகளின் விளையாட்டு என்று எனக்குத் தெளிவாக அறிவித்து, என்னையும் தன் பிள்ளை எனக்கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியாகிய சிவனே! நீக்குதற்கரிய உண்மையடியார்கள் திருமுன் நின்று துதிக்க, அழகிய அம்பலத்தில் தனிநடம் புரிகின்ற அருளரசே! நான் சொல்லுகின்ற என் சொல் மாலையையும் மகிழ்ந்து அணிந்தருள்க. எ.று.

     கொள்ளை - மிகுதி. பல்வேறு கொள்கைகளையும் அவற்றிற்குரிய செயல் வகைகளையும் எண்ணி, அமைப்பதாகையால் சமயங்களை, “கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டிய பல்சமயம்” என்றும், அச் சமயக் கொள்கைகளையும் ஒழுக்க நெறிகளையும் எடுத்துரைக்கின்ற சமய சாத்திரங்களை, “அக்கூட்டத்தே கூவுகின்ற கலை” என்றும் குறிக்கின்றார். கூவுதல் - ஓதுதல். அச் சாத்திரங்களில் பொய்யும் கலந்திருப்பதுபற்றி, “கள்ளமுறும் அக்கலைகள்” எனவும், இன்ன கொள்கைகளைச் செயற்படுத்தினால் இன்ன பயனைப் பெறுவர் என்று அக் கலைகள் கூறுவதால், அக்கலைகள் காட்டிய பல்கதியும்” எனவும், அவற்றைப் பற்றிய ஞான வகைகளையும் ஞானத்தால் பெறக்கடவ நலங்களை நல்கும் தேவர்களையும், “காட்சிகளும் காட்சி தரு கடவுளரும்” எனவும் இசைக்கின்றார். காட்சி - ஞானம், சமயங்களும், சாத்திரங்களும், கதிகளும், காட்சிகளும், கடவுளருமாகிய இவை எல்லாம் சிறு பிள்ளைகள் மேற்கொண்டு ஆடும் விளையாட்டுப் போல்வனவாம் எனத் தாம் அறிந்து கொண்டமை தெரிவிப்பாராய், “எல்லாம் பிள்ளை விளையாட்டென நன்கறிவித்து” என்றும், தன் பிள்ளைக்குத் தந்தை உரைப்பது போலத் தமக்குத் தெரிவிக்கப்பட்டமை புலப்படுத்தற்கு, “இங்கு எனைப் பிள்ளை எனக்கொண்டு” என்றும், வடலூர் வள்ளலுக்கு இராமலிங்கம் பிள்ளை என்பது பெயராகையால் அதுவும் குறித்தற்கு, “பிள்ளைப் பெயரிட்ட பதியே” என்றும் கூறுகின்றார். மெய்ம்மைத் தன்மையால் விலக்குதற்காகாத சிவனடியார் என்பார், தள்ளரிய மெய்யடியார்” என்று சான்றோர்களைச் சிறப்பிக்கின்றார். மாதொரு பாகனாகாது சிவன் மட்டும் தனி நின்று புரியும் நடனமாதலின், “தனி நடஞ்செய் அரசே” என்று கூறுகின்றார் எனினும் அமையும்.

     (84)