4174.

     நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
          நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
     மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
          விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
     கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
          காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே
     மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
          வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.

உரை:

     நால்வகை வருணம், ஆசிரமம், அவற்றிற்குரிய ஆசாரம் முதலாக நூல்களில் சொல்லப்படும் ஒழுக்கங்கள் எல்லாம் பிள்ளை விளையாட்டாகும்; பிறர் மேல் கூறப்படும், வருண வகைகளை உடம்பின் தோல் வருணம் கொண்டு அறிகின்றவர்கள் யாருமில்லை; நீ இதனைப் பரக்க விழித்துப் பார்ப்பாயாக என எனக்குச் சொல்லியருளிய சற்குருவே! காலின் நிறம் குலையாமலும் வீணே அலையாமலும் காணத் தகுவன எல்லாவற்றையும், இருந்து காணக்காட்டிய மெய்ப்பொருளாகிய பெருமானே! மயக்க வகைகளை நீக்கிய பெரியோர்களைத் தேவர்கள் நிலைக்கு, உயர்த்தும்பொருட்டு விளங்குகின்ற திருக்கூத்தாடுகின்ற சிவனே! என் சொல் மாலையை ஏற்று மகிழ்ந்து அணிந்தருள்க. எ.று.

     நால் வருணம் - அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைச் சாதிகள். வருணம் - சாதி; நிறமுமாம். ஆசிரமம் - பிரமாசரியம். இல்வாழ்வான், வானபிரஸ்தன், சந்நியாசி என்பன அவரவர்களுக்கு ஓதிய சாதி ஆசிரம ஒழுக்கங்கள் இங்கே ஆசாரம் எனப்படுகிறது. இவை யாவும் நூல்களில் ஒழுக்கம் எனக் குறிக்கப்படுவதால் இவற்றை, “நவின்ற கலைச் சரிதம்” எனவும், இவையும் பல்வகைச் சமய ஒழுக்கங்களைப்போலப் பிள்ளை விளையாட்டாகும் என்பாராய், “நவின்ற கலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே” எனவும் உரைக்கின்றார். மேல் வருணம் - மேலே கூறிய நால்வகை வருணம். அந்தணர் முதலிய நால்வகை வருணத்தாரையும் அவர் உடம்பின் தோலின் நிறம் கண்டு அவருடைய சாதி வருணத்தை ஒருவரும் கண்டறியவில்லையாதலால், “மேல் வருணம் தோல் வருணம் கண்டறிவார் இல்லை” என்றும், இதனை நீ கண்ணைப் பரக்கத் திறந்து பார்த்துக் கண்டுகொள்ளலால் என்பாராய், “நீ விழித்து இதுபார்” என்றும் கூறுகின்றார். இவ்வாறு தனக்கு இறைவன் ஞானாசிரியனாய்த் தெரிவித்தார் என்பார், “எனக்கு விளம்பிய சற்குருவே” என விளம்புகின்றார். கால் வருணம் - காலின் நிறம். தூசி படிந்து நிறம் மாறி வீணே நடந்து அலையாமல் இருந்த விடத்திலிருந்தே காணக் கூடிய எல்லாவற்றையும் தெளிவாகக் காணும்படி காணச் செய்தமை விளங்க, “கால் வருணங் கலையாதே வீணில் அலையாதே காண்பன எல்லாம் எனக்குக் காட்டிய மெய்ப்பொருளே” என்று சொல்லுகின்றார். மால் வருணம் - காம வெகுளி மயக்கங்களால் உண்டாகும் மருட்சி. மேல் வருணம் - தேவர் இனம். மயக்கமில்லாத ஞானிகளைத் தேவ தேவர்களாக உயர்த்துதற்கு அம்பலத்தில் ஆண்டவனது திருநடனம் விளங்குகிறது என விளம்புவாராய், “மால் வருணங்கடந்தவரை, மேல் வருணத் தேற்ற வயங்கு நடத்தரசே” என்று போற்றுகின்றார். மாலை - சொல் மாலை.

     (85)