4175. எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ
திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி
அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
உரை: எங்கும் எல்லா உயிர்களிலுள்ளும் விளங்குவது சிவ பரம்பொருள் ஒன்றேயாகும்; அஃது இரண்டில்லை; என் மகனே இது என் ஆணையாகச் சொல்லுவது; அங்கே செம்மையாகிய சிவம் அருட் சத்தியோடு சேர்ந்து இரண்டென நீ கண்டறிவாயாக; இவ்வாறு சொல்வதால் நீ திகைக்க வேண்டா என்று எனக்கு எடுத்துரைத்த சற்குருவாகிய பெருமானே! அவ்விடத்தும் இவ்விடத்தும் மேலிடத்தும் இருந்ததுபோல் தன்னைக் காட்டி அங்கும், இங்கும், அப்புறத்தும், எப்புறத்தும், எங்கும் நிறைந்து விளங்குகின்ற பரம்பொருளே! சிற்சபையிடத்தும் பொற்சபையிடத்தும் ஒத்த நிலையில் ஓங்குகின்ற திருக் கூத்தையுடைய அருளரசே! என்னுடைய சொல் மாலையையும் ஏற்று அணிந்தருளுக. எ.று.
எவ்விடத்திலும் எப்பொருளிலும் எவ்வுயிரின் கண்ணும் கலந்து நின்று விளங்குவது சிவம் ஒன்றேயாகும்; அஃது இரண்டாதல் இல்லை; இஃது உண்மை என வற்புறுத்தற்கு, “என்னாணை என் மகனே இரண்டில்லை” என்று எடுத்துரைக்கின்றார். சிவத்தின் தனிநிலையைச் “செவ்விடம்” என்று சிறப்பிக்கின்றார். மாணிக்கவாசகரும் “செம்மையேயாய்ச் சிவபதம்” என்று தெரிவிக்கின்றார். சிவம் அருட் சத்தியோடு கூடியது என்று சான்றோர் கூறுவதால் சிவமும் சத்தியும் சேர்ந்திருத்தலின் இரண்டெனக் கூறுதல் உண்டாதலால், “அருளொடு சேர்த்து இரண்டெனக் கண்டறி நீ” என்று கூறுகின்றார். சிவம் ஒன்றே என்றவர், அருளொடு சேர்த்து இரண்டு எனக் கண்டறிக என்பது கேட்டு உண்மை விளங்காமல் மாணவன் மயங்காமை பொருட்டு, “திகைப் படையேல்” என்று ஆசிரியர் யாப்புறுகின்றார். தீ என்பது ஒன்றாகவும், தீயும் அதன் சுடும் சத்தியும் என இரண்டாகப் பிரித்து ஓதப்படுவதுபோலச் சிவமும் அருட் சத்தியும் இரண்டாக வைத்து ஓதப்படுவதுபற்றி, “இரண்டெனக் கண்டறி நீ” என்று ஆசிரியர் விளக்குகின்றார். மேலிடத்தும், கீழிடத்தும், பக்கத்தும் இருப்பது போல் அறிந்தோர் கூறுவராயினும், எங்கும் எப்பொருளிலும் கலந்து அச்சிவம் ஒன்றே விளங்குகிறது என விளக்குதற்கு, “அங்குமிங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே” என உரைக்கின்றார். உவ்விடம் - பின்னிடமும் மேலிடமுமாகும். சிற்சபையிலும் பொற்சபையிலும் ஒப்ப நின்று ஆடுவது பற்றி, “சிற்சபை யிடத்தும் பொற்சபை யிடத்தும் ஒவ்விட ஓங்கு நடத்தரசே என இயலும். ஒவ்வுதல் - ஒப்ப விருத்தல். உரை - ஈண்டுச் சொல் மாலை மேற்று. (86)
|