4176. இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பர்
மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
உரை: ஓதப்படுகின்ற வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் முதலாக இந்திர சாலம் கூறும் நூல்கள் ஈறாகப் பல நூல்களை அறிந்தவர்கள் சொல்லுவார்கள்; ஆனால் மயக்கம் தரும் நூல் இந்திரசாலம் கூறும் நூல் மாத்திரந்தான் சாலம் என உரைப்பர்; ஆயினும், மகனே நீ நூல்கள் யாவுமே சாலமென அறிவாயாக; அன்றியும், செய்யப்பட்ட நூல்கள் எல்லாவற்றையும் அருள் ஞானக்கண் கொண்டு பார்ப்பாயாக என்று எனக்கு மனமுவந்து உரைத்தருளிய ஞான குருவாகிய மணியே! சிவனை ஒழிய அயலாகிய பிற தெய்வங்களை நோக்காத ஞானிகள் எல்லாரும் திருமுன் நின்று ஏத்தித் துதிக்க, அம்பலத்தில் ஆடுகின்ற பெருமானே! என் சொல் மாலையையும் மகிழ்ந்தேற்றி அணிந்தருளுக. எ.று.
ஓதப்படும் நூல் வகைகளில் இந்திரசாலம் முதலிய தந்திர நூல்களைக் கடையாகிய நூலாக அறிஞர் கூறுவது பற்றி, “இந்திர சாலம் கடையா உரைப்பார்” எனவும், அது கண்டார்க்கு மயக்கம் தரும் நூலாதலின் அதனை, அஃது ஒன்றை மாத்திரமே மயக்க அறிவைத் தரும் இயல்பினது என்று அறிந்தோர் கூறுவது பற்றி, “மயல் ஒரு நூல் மாத்திரந்தான் சாலமென உலகவர் அறிந்துள்ளனர்” எனவும், அஃது ஒன்று மாத்திரமன்றி வேதங்கள் முதலாக ஓதப்படும் நூல்கள் யாவுமே மயல் விளைவிக்கும் நூல்களாம் என்பாராய், “நூல் அனைத்தும் சாலவென மகனே நீ அறிக” எனவும் கூறுகின்றார். செய்யப்பட்ட நூல்கள் அனைத்தையும் கண்டாங்குக் காணாமல் திருவருள் ஞான நாட்டம் கொண்டு காண்டல் வேண்டும் என்பாராய், “செயலனைத்தும் அருளொளியால் காண்க என எனக்கே திருவுளம் பற்றிய ஞான தேசிக மாமணியே” என்று மொழிகின்றார். திருவுளம் பற்றுதல் - மனமுவந்து சொல்லுதல். ஞான தேசிகர் - ஞானாசிரியர். சிவனுக்கு அயலாக உள்ள தெய்வங்களைச் சிந்தையில் கொள்ளாத சிவஞானச் செல்வர்களை, “அயலறியா அறிவுடையார்” என்று சிறப்பிக்கின்றார். அலங்கல் - மாலை; ஈண்டுச் சொல் மாலை மேற்று. (87)
|