4177.

     தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
          சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
     ஊன்றியதே தாகமத்தின் உண்மைநினக் காகும்
          உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
     ஆன்றதிரு அருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
          ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
     ஏன்றதிரு அமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
          இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.

உரை:

     வேதாகம உரைகளை மயக்க உரை (சாலம்) எனச் சொன்னோம்; சொற்பொருளும் அவற்றாலாகிய இலக்கியங்களும் பொய் எனக் கொள்ளல் வேண்டா; நிலைத்த வேதாகமங்களில் பொதிந்துள்ள உண்மைகள் எனக்கு உரியனவாகும்; உலகறிய ஓதப்படுகின்ற வேதாகமத்தைப் பொய்யென்று நீயே கண்டுகொள்வாய்; அவை உடையதாகிய திருவருள் என்னும் செங்கோலை உனக்கு அளித்துள்ளோம்; அதுகொண்டு ஞான ஒளியால் அருளாட்சி செய்க என்று உரைத்தருளிய ஒப்பற்ற சிவபெருமானே! பொருந்திய ஞானாவமுதத்தை எனக்கும் தந்தருளிய பெரும்பொருளே! விளங்குகின்ற அம்பலத்தில் ஆடுகின்ற அருளரசே! என் சொல் மாலையையும் உவந்தேற்று அணிந்தருள்க. எ.று.

     வேதாகம உரைகள் எனச் சிலரால் பொய்யாக உரைக்கப்படுவன உண்டாதலால் அவற்றை, “தோன்றிய வேதாகமம்” என்றும், அவை பொருளற்ற மயக்கவுரை என்றற்கு, “சாலமென உரைத்தேம்” என்று கூறுகின்றார். சொல்லும் பொருளும் அவற்றாலாகிய இலக்கியங்களும் உண்மையே அடிப்படையாகக் கொண்டவையாதலால் அவைகளைப் பொய்யெனக் கருதலாகாது என்பாராய், “பொய் எனக் கண்டறியேல்” என்று புகழ்கின்றார். உண்மைப் பொருள்களாய் நிலைபெற்ற வேதாகம உரைகள் என்றும் வேண்டப்படுபவையாதலால் அவைகளை, “ஊன்றிய வேதாகமம்” எனவும், அவற்றின் உண்மைகள் வேண்டப்படுபவை என்பாராய், “உண்மை நினக்காகும்” எனவும், உலகவர் அறிந்தவர் போல் உரைப்பனவற்றை வடலூர் அடிகள் பொய் எனக் கொள்வது தோன்ற, “பொய் எனக் கண்டுணர்வாய்” எனவும் கூறுகின்றார். அருளறம் - அருட் செங்கோல் எனப்படுகிறது. எவ்வுயிர்க்கும் அருள் ஞான நல்லறத்தைப் பரப்புக என்பாராய், “அருட் செங்கோல் நினக்களித்தோம் நீயே அருளொளியால் ஆள்க” என அறிந்தமை புலப்பட, “அளித்த தனிச் சிவமே” எனப் புகழ்கின்றார். அருள் ஞானமாகிய அமுதத்தைத் தமக்கு இறைவன் அருளினமை இனிது விளங்க, “ஏன்ற திருவமு தெனக்கும் ஈந்த பெரும்பொருளே” என இசைக்கின்றார். பரம்பொருள் ஒன்றே பெருமைக்குரியதாகலின் அதனைப் “பெரும் பொருளே” எனச் சிறப்பிக்கின்றார்.

     (88)