4178.

     நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
          நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
     வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
          வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
     தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
          சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
     தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
          சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

உரை:

     பிரமன், திருமால், உருத்திரர், இந்திரர் எனவும், அருகர், புத்தர் என உரைக்கப்படுகின்ற மதத் தலைவர்கள் எல்லாரும் ஞான வானத்தில் தோன்றி, வரும் அருள் ஒளியைச் சிறிதே பெற்று, வானுலகிலும் மண்ணுலகிலும் தங்கள் மனம் போனபடி எல்லாம் மதுவுண்டு மயங்கியவர் போல விளையாடுகின்ற சிறு பிள்ளைக் கூட்டத்தினராவர் எனவும், அவர்களுடைய உபதேசங்களை அருட் பெருஞ் சோதியாகிய ஞானத்தால் நீ கண்டறிவாயாக என உரைத்தருளிய சற்குருவே! அம்பலத்தில் ஆடல் புரிகின்ற அருளரசே! என் சொல் மாலையையும் மகிழ்ந்தேற்று அணிந்தருளுக. எ.று.

     பிரமன் முதலிய நால்வரும் வானுலகத்திலும், அருகர், புத்தர் முதலியோர் மண்ணுலகத்திலும் சமயப் பணி புரிந்ததனால் அவர்களை, “வானகத்தும் வையகத்தும் விளையாடுகின்ற சிறு பிள்ளைக் கூட்டம்” என்றும், அவர்களுடைய சமய உணர்வுகளும் ஒழுக்கங்களும் தெளிவில்லாதவை என்ற கருத்துப்பட, “மனம் போனபடியே தேன் முகந்துண்டவர் எனவே விளையாடா நின்ற சிறு பிள்ளைக் கூட்டம்” என்றும் தெரிவிக்கின்றார். தேன் - மது. மதுவுண்டு மயங்கினவர்கள் தெளிவில்லாத சொல்லும் செயலும் உடையவராவர் என அறிக. சிறு பிள்ளைகளின் கூட்டம் அனுபவம் முதிர்ந்த வழித் தம் செயலைக் கைவிடுவதுபோல, உண்மை ஞானம் எய்தியவிடத்துத் தங்கள்செயலைக் கைவிடுவர் என்பது கருத்து. அவர்களது ஞானத்தின் வழி நில்லாது அருட்பெருஞ்சோதியாகிய அருள் ஞானத்தின் வழியாக உண்மைகளைக் கண்டறிக என்று ஞானதேசிகன் உபதேசித்தான் என்பாராய், “அருட் பெருஞ் சோதியினால் தான் மிகக் கண்டறிக எனச் சாற்றிய சற்குருவே” என மொழிகின்றார். சபை - ஞானசபை. சாற்று - சொல்லுகின்ற சொல் மாலை. சாற்றுதல் - சொல்லுதல்.

     (89)