4179. தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடாது
என்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
உரை: பிழை படுதலில்லாத வேதாந்தம், சித்தாந்தம் முதலாகச் சொல்லப்படுகின்ற அந்தங்கள் எல்லாம் தனித்தனியாக உரைக்கும் பொருள் உண்மைகளை விரிவான சுத்த சிவ சன்மார்க்க நெறியில் இருந்து அருட்பெருஞ் சோதியாகிய ஞானத்தைத் துணை கொண்டு யாவரும் அறிதல் கூடும்; பிறிதொன்றால் எத்தகையவராலும் கண்டறிய முடியாது; இது என் ஆணையாகச் சொல்லுவது; என் மகனே! அருட் பெருஞ்சோதியாகிய ஞானத்தை வழுவாது பெற்றமையாதலால் நீ அருட்பெருஞ் சோதி ஒளியில் வாழ்வாயாக என்று உரைத்தருளிய தலைவனே! அம்பலத்தில் ஆடல் புரிகின்ற அருளரசே! என் சொல் மாலையை உவந்தேற்று அணிந்தருளுக. எ.று.
வேதாந்தம், சித்தாந்தம், கலாந்தம், யோகாந்தம், போதாந்தம், நாதாந்தம் ஆகிய ஆறினையும், “வேதாந்த சித்தாந்த முதலாச் சாற்றுகின்ற அந்தமெலாம்” என்றும், அவை ஒவ்வொன்றும் தனித்தனி உரைக்கும் பொருள்கள் உண்மையானவை என்பாராய், “தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச் சாற்றுகின்ற அந்தமெலாம் தனித் துரைக்கும் பொருள்” என எடுத்துரைக்கின்றார். அந்தமெலாம் தனித்துரைக்கும் தவறாத பொருள் என இயையும். இவறுதல் என்பது சுருங்குதலாதலால் இவறாத சன்மார்க்க நிலை என்பதற்கு, விரிந்த சன்மார்க்க நிலை எனக் கூறப்பட்டது. அருட்பெருஞ்சோதி ஞானம் சுத்த சிவ சன்மார்க்கத்தால் பெறப்படுவது என்றற்கு, “சுத்த சிவ சன்மார்க்க நிலையில் இருந்து அருளாம் பெருஞ் சோதி கொண்டறிதல் கூடும்” என்று கூறுகின்றார். வேதாந்தம் முதலாகிய அந்தங்கள் உரைக்கும் உண்மைகளை அருட்சோதி ஞானத்தாலன்றிப் பிறிது எதனாலும் எவராலும் காண்டல் முடியாது என்பதை வற்புறுத்தற்கு, “எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடாது” என்றும், “என் ஆணை” என்றும் கட்டுரைக்கின்றார். அருட்சோதி ஞானத்தைப் பெற்றதனால் அருள் ஒளியில் நெடிது வாழ்க என்று ஆசிரியர் வாழ்த்தினமையின், “அருட் பெருஞ்சோதியைத்தான் தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே” எனப் பாராட்டுகின்றார். சபை என்பது இங்கு ஞான சபை. (90)
|