4180.

     ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
          அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
     வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
          வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
     துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
          சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
     உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
          ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

உரை:

     என் மகனே, இப் பிறப்பிலேயே நீ பெறவேண்டிய ஞானத்தைப் பெற்றுக் கொண்டாயாதலால், நீ இனி ஐயமோ அச்சமோ நெஞ்சிற் கொள்ளவேண்டியதில்லை என உரைத்து, மண்ணின் மேல் என்னைத் தனியே இருக்கவைத்துத் திருவருள் ஞானமாகிய மணிமுடியும் சூட்டி வாழ்க என்று எனை வாழ்த்திய என் வாழ்வுக்கு முதல்வனாகிய பெருமானே! தூயதாகிய அருட்பெருஞ் சோதியாகிய அருள் ஞானத்தை நல்கும் சிவவெளியில் திகழ்கின்ற சிவமே! இன்ப மயமானவனே! எல்லாம் செய்யவல்ல தனிப்பெருந் தலைவனே! உயிர்கட்கு உய்வகைக் காட்டி அழகிய அம்பலத்தே நடித்தருளும் நடராசப் பெருமானே, என் சொல் மாலையை உவந்து அணிந்து மகிழ்ந்தருளுக. எ.று.

     வேறு பிறவிகளிலின்றி எடுத்துள்ள இப்பிறப்பிலேயே சிவஞானப் பெருநிலையை நீ பெற்றிருக்கின்றாய்; இதில் அச்சமோ ஐயமோ வேண்டா என அறிவுறுத்தமை விளங்க, “இப்பிறப்பிற் றானே நீ அடைவதெல்லாம் அடைந்தனை இனி நீ அஞ்சலை என்றருளி” என இயம்புகின்றார். மணிமுடி என்றது திருவருள் ஞானத்தை என அறிக. வாழ்க்கைக்குரிய நினைவு சொற் செயல்களை முன்னின்று இயக்குதலின் சிவபெருமானை, “என் வாழ்க்கை முதற் பொருளே” என்று போற்றுகின்றார். மாணிக்கவாசகரும், “போற்றி என் வாழ்முதலாகிய பொருளே” எனப் புகழ்ந்துரைப்பது காண்க. அருள் ஞானத்தை நல்கும் சுத்த சிவ பரம்பொருள் அதற்குரிய பரவெளியில் விளங்குதலால் அதனைக் குறித்தற்கு, “அருட் பெருஞ்சோதி சுத்த சிவ வெளியே” என்றும், அது இன்ப மயமாதல் தோன்ற, “சுக மயமே” என்றும், அதனுடைய வரம்பில்லாத ஆற்றலை உணர்த்த, “எல்லாஞ் செய்யவல்ல தனிப் பதியே” என்றும் இயம்புகின்றார். அம்பலத்தில் இறைவன் திருக்கூத்தாடுவது ஆன்மாக்கள் ஆணவ முதலிய அனாதிக் கட்டுக்களிலிருந்து நீங்கி உய்தி பெரும் பொருட்டென்று சான்றோர் கூறுதலால், “உய்வு நெறி காட்டி மணி மன்றத்தே நடிக்கும் ஒருமை நடத்தரசே” என மொழிகின்றார். ஒருமை நடம் - சிவன் ஒருவனே நின்று உமாதேவி காண ஆடும் திருக்கூத்து.

     (91)