4181.

     காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
          களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
     மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
          மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
     சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
          சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
     மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
          மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.

உரை:

     மிக்க இளமைப் பொழுதின்கண், எனக்கு அரிதிற்கிடைத்த பெருமை சான்ற பரம்பொருளாகிய சிவனே! எனக்கு மன மகிழ்ச்சி தருபவனே! என் உள்ளத்தின்கண் நன்கு பழுத்த இனிய கனியாகியவனே! மறுமையிலும் இம்மையிலும் ஒருமை நெறியால் உளதாகும் தவத்தால் பெறப்படும் பெரும் பயன்களாக உண்டாகும் நலமனைத்தும் ஒருநாள் தருமச்சாலையில் எனக்குத் தந்தருளிய ஒப்பற்ற தலைவனே! சமரச சன்மார்க்க சங்கத்தின்கண் இனிது வீற்றிருக்கும் அருள் நிதியாகிய பெருமானே! மாலைகளில் சிறந்தனவாகிய சொல் மாலைகளைப் பூண்டு அம்பலத்தாடும் பெரிய கூத்தப்பெருமானே! என்னுடைய சொல் மாலையையும் மகிழ்ந்து ஏற்றருள்க. எ.று.

     காலை என்பது மிக்க இளமைப்பருவம். வடலூர் அடிகளை மிக்க இளமைப் பருவத்திலேயே சிவபெருமான் அருளுணர்வு நல்கி ஆட்கொண்டமை உணர்த்தற்கு, “காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே” என்று கூறுகின்றார். களிப்பு என்றது களிப்பை நல்கும் பரம்பொருள் மேற்று. மனத்தின்கண் இடையறவின்றி நினைந்து பரவுதலால் இன்பம் உண்டாதல்பற்றி, “கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே” என்று குறிக்கின்றார். ஒருமையுணர்வு நெறி, தவத்துக்கு உரியதாதலால், “ஒருமையிலே” என்று உரைக்கின்றார். தவத்தால் அருட்செல்வப் பயனும் அதனால் விளையும் இன்பமுமாகிய எல்லாவற்றையும் ஒருநாள் வடலூர்த் தருமச்சாலையில் இறைவன் தந்தருளிய குறிப்புத் தோன்ற, “தவத்தால் மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச் சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப்பதியே” என்று சாற்றுகின்றார். சமரச சன்மார்க்க சங்கத்தால் அடையும் பயன் திருவருட் சிவஞானமாதலின் அதனை, “சமரச சன்மார்க்க சங்கத் தலை அமர்ந்த நிதியே” என்று புகழ்கின்றார். பூமாலை, பொன் மாலை முதலிய மாலை வகைகளில் நிலைபேறு கொண்ட சிறந்த சொல் மாலையாதலால் அதனை, “மாலையிலே சிறந்த மொழி மாலை” என்று மொழிகின்றார். மாலை - சொல் மாலை.

     (92)