4182. சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.
உரை: ஞானப்பதத்தையும் தனது பதத்தையும் அழகிய திருவடிக்கண் காட்டியருளும் சிவபதச் செல்வனே! இன்பம் தரும் இனிய பதத்தில் எடுத்த பாகு போல்பவனே! சொற்களின் எல்லை கடந்து நிற்கும் சாக்கிரம் முதலாய முப்பதத்துக்கு அப்பாலுள்ள துரிய பதத்தையும் கடந்து நிற்கின்ற பெரியதாகிய தனிப் பரம்பொருளே! நல்ல நின் திருவடியை என் தலைமேல் வைத்துக் கற்கின்ற கல்வி அனைத்தையும் ஒரு கணப்பொழுதில் நான் அறிந்து சிவமாகிய தானாகுமாறு அருள்புரிந்த ஞான குருவே! பல்வேறு உயர் பதங்களில் இருக்கும் ஞானத் தலைவர்கள் எல்லாரும் கூடி நின்று துதிக்க அழகிய அம்பலத்தின்கண் நடம் பயிலும் கூத்தப் பெருமானே! பாடல்களாலாகிய என் சொல் மாலையையும் உவந்தேற்று அணிந்தருள்க. எ.று.
சிற்பதம் - ஞானப்பதம். சி்வமாகிய தன் பதத்தைத் “தற்பதம்” என்று கூறுகின்றார். திருவடி ஞானம் எல்லாப் பதங்களையும் பதார்த்தங்களையும் காட்டுவதாதலால், “பொற் பதத்தே காட்டும் சிவ பதமே” என்று தெரிவிக்கின்றார். வாக்குக்கு எட்டாததோடு சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி ஆகிய மூன்றையும் கடந்ததாகிய துரிய பதத்துக்கும் அப்பாலது சிவ பரம்பொருள் எனத் தெளிவிப்பாராய், “சொற் பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே துரிய பதமும் கடந்த பெரிய தனிப்பொருளே” என்று விளம்புகின்றார். நற்பதம் - நல்ல திருவடி. தானாதல் - சிவமாதல். இந்திர பதம் முதலிய தேவ பதங்கள் பலவாதலால் அப் பதங்களில் உள்ள தேவர்களை, “பற்பதத்துத் தலைவர்” என்று பகர்கின்றார். மன்றில் நடம் பயிலுதல் - அம்பலத்தின்கண் ஆடுதல். (93)
|