4183.

     ஆதியிலே எனைஆண்டென் அறிவகத்தே அமர்ந்த
          அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே
     வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்
          மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்
     சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை
          தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
     நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்
          நிகழ்த்திய சொன்மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.

உரை:

     பிறந்த குழவிப் பருவத்திலேயே என்னை ஆண்டருளி என் அறிவின்கண் அமர்ந்த அப்பனே! என்னுடைய அன்பும் ஆருயிரும் எனக்கு அமுதமும் ஆனவனே! வீதியிலே ஏனைச் சிறுவர்களோடு கூடி விளையாடித் திரிந்த என் பிள்ளைப் பருவமே மிகப் பெரிய பருவம் எனத் திருவுள்ளம் கொண்டு திருவருள் ஞானமாகிய அருட் சோதியிலே எனக்கு ஆசை தோற்றுவித்தும், இனிய சொல் மாலைகளைத் தொடுத்துப் பாடச் செய்வித்தும், அவற்றை உவந்து அணிந்தருளியும் என்னை மகிழ்வித்த துரையாகிய சிவபெருமானே! ஞான சபையாகிய நீதிமன்றத்தின்கண் நிறையுடைய நிருத்தம் புரியும் அருளரசே! அடியவனாகிய யான் இப்பொழுது பாடி அணிகின்ற சொல் மாலையையும் குற்றமற்ற ஒளியுடையதாக அணிந்து கொண்டருளுக. எ.று.

     ஆதி என்பது ஈண்டுப் பிறந்த அணிமைத்தாகிய குழவிப் பருவம். பச்சிளம் குழந்தையாக இருக்கும்போதே தன்னைச் சிவபிரான் ஆண்டு கொண்டான் என்பது குறிப்பு. வீதியில் விளையாடும் பருவம், களங்கமில்லாத உள்ளத்தோடு கூடிய பெருமைமிக்க பருவமாதலால், “வீதியிலே விளையாடித் திரிந்த பிள்ளைப் பருவம்” எனக் கூறுகின்றார். களங்கமற்ற பிள்ளை உள்ளம் தெய்வத் தன்மையுடையது என்பது உலகுரை. பிள்ளைப் பருவத்திலேயே வடலூர் வள்ளல் அருட்சோதியில் ஆர்வம் மிகுந்து அந்த ஞானத்தால் இனிய சொல் மாலைகளைப் பாடத் தொடங்கினமை தோன்ற, “அருளாம் சோதியிலே விழைவுறச் செய்து இனிய மொழி மாலை தொடுத்திடச் செய்து அணிந்துகொண்ட துரையே” என்று சொல்லுகின்றார். நீதியே சிவனுக்குத் திருவுருவாதலால் அவன் ஆடும் அம்பலத்தை, “சிற்பொதுவாம் நீதியிலே நிறைந்த நடத்தரசே” என்று எடுத்தோதுகின்றார். திகழ்த்தல் - ஒளிர்வித்தல்.

     (94)