4184.

     கணக்குவழக் கதுநடந்த பெருவெளிக்கு நடுவே
          கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
     இணக்கம்உறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
          இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
     மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
          வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
     பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
          பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.

உரை:

     அளந்து காண்டற்கும், சென்று உலாவி அறிதற்கும் உரிய எல்லைகளுக்கு அப்பால் உளதாகிய பெருவெளியின் நடுவில், கதிர் பரப்பி ஒளி செய்கின்ற கண்கள் நிறையத் திகழும் சிவமாகிய சுடர்ப் பொருளே! ஞானத்தால் தம்மிற் சேர்ந்து உறையும் மெய்யன்பர்களின் இதயவெளி முற்றும் இனிது விளக்கமுற அதன் நடுவில் ஒளிர்கின்ற ஒளியையுடைய விளக்காகிய பெருமானே! உயரிய மணம் கமழும் சிவமனமே! எனது உள்ளத்தில் ஞான மயமாய் விளங்குகின்ற தனிப் பெரும்பொருளே! எனக்கு வாழ்வு தரும் செல்வமே! என் பிறவி நோய்க்கு மருந்தாகிய சிவபிரானே! வேறுபட்டுப் பிணங்குதல் இல்லாத பெரிய தவச் செல்வர்கள் சூழ விருந்து போற்ற, அழகிய அம்பலத்தின்கண் பெரிய நடம் புரிகின்ற அருளரசே! யான் பிதற்றுகின்ற சொல் மாலையையும் ஏற்றணிந்து உவந்தருள்க. எ.று.

     பிரமாணங்களால் அளந்து காண முடியாததும், சென்று கண்டு அறிய முடியாததுமாகிய மாயாதீதப் பெருவெளியை, “கணக்கு வழக்கது கடந்த பெருவெளி” என விளக்குகின்றார். அவ்வெளியின் நடுவில் சிவபெருமான் இருந்து ஞானச் சுடராய்த் திகழ்கின்றானாதலால், “பெருவெளிக்கு நடுவே கதிர் பரப்பி விளங்குகின்ற கண் நிறைந்த சுடரே” என்று போற்றுகின்றார். கண் என்றது, அறிவுக் கண்ணாகிய ஞானக் கண்ணை என அறிக. காணும் கண் நிறைந்து ஒளிர்வது பற்றி, “கண் நிறைந்த சுடர்” என்று கூறுகின்றார். மெய் என்பார் மனவொருமையுற்றுத் தம்மிற் கூடுவதின்றி ஒத்த பண்புடைய சான்றோர்களை, “இணக்கமுறும் அன்பர்கள்” என இயம்புகின்றார். இதயவெளி - மனத்தால் உணரப்படும் பரவெளி. அவ் வெளியின்கண் ஞான ஒளி பரப்பி ஞானச் சூரியனாய் விளங்குதலால், “இனிது விளங்குற நடுவே இலங்கும் ஒளி விளக்கே” என்று இசைக்கின்றார். ஞானப் பொருளாய் உள்ளக் காட்சிக்கு உருவாய்த் தோன்றுதலால், “சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனிப்பொருளே” என உரைக்கின்றார். இன்ப வாழ்வளிக்கும் பெருமானை, “என் வாழ்வே” என்று ஏத்துகின்றார். அன்பாகிய ஞானச் செல்வர்களாதலால் தவச் செல்வர்கள் கருத்து வேறுபட்டுப் பிணங்குதல் இலர் என்பது தோன்ற, பிணக்கறியாப் பெருந்தவர்கள்” என்று புகழ்கின்றார்.

     (95)