4185.

     அடிச்சிறியேன் அச்சம்எலாம் ஒருகணத்தே நீக்கி
          அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து
     கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக்
          கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே
     வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே
          மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே
     படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில்
          பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.

உரை:

     மிக்க சிறுமையுடையவனாகிய என்னுடைய அச்சங்கள் எல்லாவற்றையும் ஒரு கணப்பொழுதில் நீக்கி, அருள் ஞானமாகிய அமுதத்தை மிகுதியாகத் தந்து அணி வகைகளில் ஒன்றையும் எனக்கு அணிந்து மணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் முதலிய தேவ தேவர்கள் கண்டு வியக்குமாறு கதிர்முடி ஒன்றை என் தலையிற் சூட்டி, என்னை மகிழ்வித்து ஆட்கொண்டருளிய தலைவனாகிய சிவ பெருமானே! திருந்திய வேத ஞானத்தில் உச்சியில் ஒளிரும் பெரிய மாணிக்க மணியின் அழகிய சுடரொளியை யுடைய சிவனே! மணமும் ஒளியுமாகிய இரண்டின் எல்லையைக் கடந்து நிற்கும் பெரிய ஆகாயத்தின் நடுவே விளங்கும் ஒளியாயவனே! மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் பரவி வணங்க, அம்பலத்தில் விரும்பி ஆடுகின்ற அருளரசே! யான் பாடும் இச் சொல் மாலையை உவந்தேற்று அணிந்தருள்க. எ.று.

     அடிச் சிறியேன் என்பது அடி ஈண்டு மிகுதி உணர்த்தி நின்றது. அணி என்றது இன்ன அணி என்று விளங்கவில்லை. கடிக் கமலம் - மணம் கமழும் தாமரை மலர். கதிர்முடி என்பது சிவஞானத்தைக் குறிக்கின்றது. வடித்த மறை - குற்ற மின்றாகச் செய்யப்பட்ட வேதம். மாமணிப் பொற்சுடர் - பெரிய மாணிக்க மணியில் எழுகின்ற அழகிய சுடரொளி. மனம் வாக்குக் கடந்த ஒளி பெருவான் நடுவாம் ஒளி என இயையும். படித் தலத்தார் - மண்ணுலகில் உள்ளவர். பாட்டு - பாமாலை.

     (96)