4186.

     எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
          ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
     மெய்த்துணையாம் திருவருட்பேர் அமுதம்மிக அளித்து
          வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
     சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
          துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
     சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
          சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

உரை:

     எத்தனையோ சிறுமையுடையவனாகிய என்னைப் பிரமன் திருமால் முதலிய தேவர் எவராலும் ஏறமாட்டாத, உயர்நிலைக்கண் உயர்த்தித் தானும் உடனிருந்து மெய்ம்மைத் துணைபுரியும் திருவருள் ஞானமாகிய பேரமுதத்தை மிகைப்படத் தந்து நாயனைய அடியவனாகிய யான் விரும்பியவாறு விளையாடச் செய்து சுத்த சிவ சன்மார்க்க நெறி ஒன்றே எங்கும் விளங்கத் திருவருள் செய்த பெரிய சோதி உருவாகிய சிவபிரானே! அம்பலத்தில் ஞானத் திருவுருக்கொண்டு கூத்தாடும் உத்தம ஞானத் தேசிகனே! ஞான சபையில் எழுந்தருளும் அருளரசே! சிறுமை மிக்க என் சொல் மாலையையும் உவந்தேற்று அணிந்தருள்க. எ.று.

     குணஞ்செயல்களால் மிக்க குறையுடையவன் எனத் தம்மைக் குறித்தற் பொருட்டு, “எத்துணையும் சிறியேன்” என இயம்புகின்றார். பெருநிலை - சி்வஞானத்தால் எய்தப்படும் பெருமை பொருந்திய நிலை. எவ்வாற்றாலும் பொய்யாத துணை என்றற்கு, “மெய்த்துணை” என்கின்றார். அடி நாயேன் என்றது அடிச்சிறியேன் என்றாற்போலச் சிறுமை யுணர்த்திநின்றது. விளையாடல் - செய்வன செய்து ஒழுகுதல். சுத்த சிவத்தை முடிப்பொருளாகக் கொண்டது சன்மார்க்க நெறியாதலால் அது, “சுத்தசிவ சன்மார்க்க நெறி” என்று குறிக்கப்படுகிறது. இந்நாளில் அரசியல் உலகில் சமரச சமதர்மம் என்று பேசப்படுகிறது. இது நாடு முழுதும் பரவினாலன்றி மக்களிடையே நல்வாழ்வு அமையாதென்பதுபற்றி, “எங்கும் துலங்க அருள் செய்த பெரும் சோதியனே” என்று சொல்லுகின்றார். கூத்தப் பெருமானுடைய திருமேனி ஞானமயமாதலின், “பொதுவில் சித்துருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே” என இயம்புகின்றார். சிற்சபை - ஞானசபை.

     (97)