4187. இருந்தஇடம் தெரியாதே இருந்தசிறி யேனை
எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
அதிசயிக்கத்தக்க திருஅமுதும் அளித்தபெரும் பதியே
திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
உரை: இருந்த இடத்தின் இயல்பு அறியாமலே கிடந்த சிறுமை யுடையவனாகிய என்னை, எவ்வுலகங்களிலும் உள்ள யாவரும் ஏத்திப் போற்றுமாறு உயர்நிலையின்கண் ஏற்றி, அரிய தவஞானிகளும், பிரமன் முதலிய தலைமைத் தேவர்களும் தத்தம் மனத்தின்கண் அதிசயப்படும்படி திருவருள் ஞானவமுதம் தந்து சிறப்பித்த பெரிய தலைவனாகிய சிவனே, திருந்திய வேதங்களின் முடிபொருளானவனே! அப்பொருள் முடிவின்கண் உண்மை உணர்ந்தோர் பிரம ஞான ஒளி விளங்கக் கண்டு நுகருமாறு நிலவும் சிவபோகப் பொருளே! பெரிய தவச் செல்வர்கள் நின்று துதிக்க அழகிய அம்பலத்தின்கண் நடம் புரிகின்ற பெரிய நடராசப் பெருமானே! என்னுடைய சொல் மாலையையும் உவந்தேற்று அணிந்தருள்க. எ.று.
அறியாமையால் தாம் மயங்கி இருந்த நிலைமை புலப்படத் தம்மை வடலூர் வள்ளல், “இருந்த இடம் தெரியாதே இருந்த சிறியேனை” என இசைக்கின்றார். ஞானத்தால் தாம் மேம்பட்டமை தெரிவித்தற்கு, “எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திட மேலேற்றி” என்றும், தாம் பெற்ற அருள் ஞானச் சிறப்பை உரைப்பாராய், “அருந்தவரும் அயன் முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்கத் திருவமுதம் அளித்த பெரும் பதியே” என்றும் இயம்புகின்றார். வேதாந்தத்தின் முடிபொருள் பிரமன் என்பதும், அதன் முடிவு பிரம ஞானப்பேறு என்பதும், அதனைப் பெற்ற பெருமக்கள் சிவபோகத்தை நுகர்வதென்பதும் நூல்களால் உரைக்கப்படுவதால் அதனை, “திருந்து மறை முடிப்பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உட்கொண்ட சிவபோகப் பொருளே” என்று கூறுகின்றார். பெருந்தவர்கள் - வியாக்கிர பாதர், பதஞ்சலி முதலிய தவச் செல்வர்கள். பெருநடம் - பெருமை பொருந்திய திருக்கூத்து. தமது சொல்மாலையால் தம்முடைய சிறுமையும் பணிவும் தோன்ற வடலூர் வள்ளல், “பிதற்று” என்று மொழிகின்றார். பிதற்றல் - குற்றம் நிறைந்த சொற்களைக் குறைபடப் பேசுதல். (98)
|