4188. குணம்அறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
மணமுறுபேர் அருள்இன்ப அமுதமெனக் களித்து
மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
உரை: குணமாவனவற்றை அறியாதவனாகிய யான் செய்த பெருங் குற்றங்களை எல்லாம் குணமாம் என்று கொண்டு, என்னுடைய எண்ணமெல்லாம் நிறைவித்து, மணமிக்க பேரருள் ஞானமாகிய இன்ப அமுதத்தையும் தந்து, உண்பித்து அழகிய மணிமுடியை என் தலையில் சூட்டி வாழ்க என்று வாயார வாழ்த்தி, என்னை நீங்குதலின்றி எனது உள்ளத்தில் கலந்து, நானும் சிவமாகிய தானும் சிவஞானத் திருவடிவு எய்திச் சிறந்தோங்கச் செய்து கூறுகின்ற அருட்சோதியாகிய அரசும் அளித்து அம்பலத்தில் ஆடுகின்ற அருளரசே! என் சொல் மாலையையும் உவந்து அணிந்தருள்க. எ.று.
குணம் இது, குற்றம் இதுவென்று தெரிந்துணரும் திறமில்லாதவன் எனத் தம்மைக் குறிப்பாராய் வடலூர் வள்ளல், “குணம் அறியேன்” என்று கூறுகின்றார். குற்றத்தைக் குணமாகக் கொள்வதாவது குற்றம் புரிவது உயிர்க்கியல்பு எனக்கொண்டு பொறுத்தருள்வது. என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து என்றது, என்னுடைய எண்ணமெல்லாம் நிறைவேறச் செய்து என்பதாம். திருவருள் ஞானத்தை இன்ப அமுதமென இசைக்கின்றாராதலால் அந்த ஞான வமுதம் சிவ மணம் கமழ்வது என்றற்கு, “மணமுறு இன்ப அமுதம்” என இயம்புகின்றார். தணவு - நீங்குதல். தம்மைச் சிவமாக்கி அருளினமை விளக்குதற்கு, “தான் கலந்து நானும் தானும் ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே” என்று சாற்றுகின்றார். சிவ பரம்பொருள் எல்லாம் வல்லதாகலின் தன்னை அடையும் ஆன்மாவோடு தான் கலந்து கொள்ளல் கூடுமாகலின், “தான் கலந்து” என்றும், ஆன்மா சிவஞான வடிவம் பெறுகிற பொழுது சிவம் வேறு ஆன்மா வேறு எனப் பிரித்துணர மாட்டாத தனிநிலையைப் பெறுவதால், “நானும் தானும் ஒரு வடிவாகி” என்றும் எடுத்துரைக்கின்றார். “சிவஞானத்தால் சிவன் உளத்தே தோன்றித் தீ இரும்பைச் செய்வது போல் சீவன் தன்னைப் பந்தனையை அறுத்துத் தானாக்கித் தன்னுருவப் பரப்பெல்லாம் கொடு போந்து பதிப்பன் இவன்பாலே” (சிவசித்தி) என்று அருணந்தி சிவனார் உரைப்பது காண்க. அணவுறல் - நெருங்குதல். (99)
|