4189.

     தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத்
          தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதும் தவிர்த்தே
     மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி
          வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து
     நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய்
          நிறையநிறை வித்துயர்ந்த நிலைஅதன்மேல் அமர்த்தி
     அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
          ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

உரை:

     இவ்வுலகில் முதல் இது கடை யிது என்று அறியாமல், எங்கும் திரிந்துகொண்டிருந்த சிறுமையுடையவனாகிய என்னைத் தானே வந்து வலிய ஆட்கொண்டு இடையே இருந்த தடைகள் பலவற்றையும் போக்கி, மயக்கம் கெட உண்மை ஞானம் தந்து, திருவருளாகிய அமுதத்தைக் கொடுத்து, உண்பித்துப் பலவும் இனிது செய்யவல்ல சத்தியுண்டாக அருள் புரிந்து சிவமாகிய தானும் யானும் சிவ வடிவுற்று நிலைபெறுமாறு சிவமாந் தன்மைகள் குறைவற நிறையச் செய்து உயர்வற்ற உயர்நிலையில் இருக்க வைத்துப் பேரருள் ஞானமாகிய அரசினை எனக்கு நல்கி அம்பலத்தாடுகின்ற அருளரசே! என் சொல் மாலையையும் உவந்தேற்று அணிந்தருள்க. எ.று.

     நலந் தீங்குகளை நோக்காமல் மனம் போனவாறு செருக்குற்றுத் திரிபவர்களை, “தலை கால் தெரியாமல் திரிபவர்” என்று இகழ்வது உலக வழக்கு. அப்பொருண்மையும் தோன்ற வடலூர் வள்ளல், “தலைகால் இங்கு அறியாதே திரிந்த சிறியேன்” என்று தம்மைக் கூறுகின்றார். “தனித்துணை நீ நிற்க யான் தருக்கித் தலையால் நடந்த வினைத் துணையேன்” (நீத்தல்) என்று மாணிக்கவாசகர் உரைப்பதும் ஈண்டு நினைவு கூரத் தக்கது. இறைவன் தாமாகவே வந்து ஆட்கொண்டு தமக்கு ஆளாதற்கு இருந்த தடைகள் அனைத்தையும் போக்கினமை தோன்ற, “தான் வலிந்து ஆட்கொண் டருளித் தடை முழுதும் தவிர்த்தே” எனவும், மெய்யுணர்வு தந்து மலைவு நீக்கினமை புலப்பட, “மலைவறு மெய்யறிவு அளித்து” எனவும், அதன் வாயிலாக அருள் ஞான அமுதம் பெற்றமை விளங்க, “அருளமுதம் அருத்தி” எனவும், எல்லாம் செய்யவல்ல சத்திகளை வழங்கினமையின், “வல்லப சத்திகள் எல்லாம் மருவியிடப் புரிந்து” எனவும் விளங்க உரைக்கின்றார். தடைகள் - மலகன்மங்கள் விளைவிக்கும் தடைகள். ஒளி தோன்ற இருள் நீங்குவது போல மெய்யறிவு தோன்ற மலைவுகள் ஒழிதலால், “மலைவறு மெய்யறிவு” என்று சிறப்பிக்கின்றார். காரிய சித்தி, யோக சித்தி, ஞான சித்தி எனச் சித்திகள் பலவாதலின், “வல்லப சித்திகள் எல்லாம்” என்று கூறுகின்றார். தம்மைச் சிவ பரம்பொருள் சிவமாக்கிய தன்மையை விளக்குவாராய், “தானும் அடியேனும் ஒரு வடிவாய் நிறைய நிறைவித்து” என்றும், தாம் சிவமாய், சிவபோகி ஆனமை தெரிவித்தற்கு, “உயர்ந்த நிலை அதன்மேல் அமர்த்தி” என்றும் எடுத்தோதுகின்றார். எங்கும் எப்பொருளிலும் பரந்தியலும் தன்மை இது வென்றற்கு, “அலர்தலைப் பேரருட் சோதி” என ஓதுகின்றார். அலங்கல் - மாலை.

     (100)