58. நற்றாய் கூறல்
சிவஞான ஒழுக்கங்களால் சீவன் முத்தர்ப் பெருமக்கட்கு அவர்களுடைய பசு கரணங்கள் பதி கரணங்களாக மாறுதல் போலப் பத்தி நெறியில் நின்று சிவயோக போகத்தில் வேட்கை மிக்கவர்க்கு ஆண்மை பெண்மை ஆகிய பண்புகள் மாறுகின்றன. ஆடவனாகிய இராமபிரானைக் கண்டு அவனது திருமேனி அழகில் ஈடுபட்டு மனமிழந்த ஆண் மக்கள் ஆண்மை யுணர்வை இழந்து பெண்மை உணர்வுற்று அவனைக்கூடக் காதலிக்கும் நிலைமை பெற்றனர் எனக் கம்பர் கூறுவது ஈண்டு நினைத்தற்குரியதாம். இவ்வகையில் வடலூர் வள்ளலார்க்கு உண்டாகியிருந்த திருவருள் ஞான நிறைவு சிவயோக போகத்தில் அவரது தூய உணர்வைச் செலுத்துகிறது. சிவ யோகத்திலும் அவ்யோகம் பயக்கும் சிவபோகத்திலும் வேட்கை மிகுவிக்கின்றது. அதற்கேற்பத் துணைபுரிவது சிவத்தின் திருவருட் சத்தி. சிவபோக வேட்கை மீதூர்ந்திருக்கும் வள்ளற் பெருமானுடைய ஆன்ம சிற்சத்திக்கு நற்றாயாகவும், உயிர்த் தோழியாகவும், ஆன்ம சிற்சத்தியைத் தலைவியாகவும் நிறுத்தித் தமது ஆன்மானுபவத்தை உலகறிந்து துணிதல் வேண்டித் தெரிவிக்கின்றார். அப்போக வேட்கை அனுபவத்தைப் புலவர் பெருமக்கள் வகுத்த கைக்கிளை இலக்கண நெறியில் உரைத்தருளுகின்றார். கைக்கிளையாவது, தலைவன் தலைவி என்ற இருவர் பாங்கில் ஒருவர்பால் உளதாகும் காதல் வேட்கையைப் பாடுவது. பாடல் சான்ற இப்பகுதியில் தலைவனொழிய ஏனைத் தாயரும், தோழியரும், தலைவியுமே சொல் நிகழ்த்துவர். இந்நெறியில் அருட் சத்தியாகிய நற்றாய் தலைமகளாகிய ஆன்ம சிற்சத்தியின் வேட்கை மிகுதியைத் தோழியர்க்குக் கூறும் வகையில் “நற்றாய் கூறல்” என்ற இப்பகுதிக்கண் உரைக்கின்றார்.
இப்பகுதிக்கண் உள்ள இப் பாட்டுக்கள் பத்தும் தலைமகள் தன் வேட்கை மிகுதியைத் தலைவனாகிய சிவபிரானை நினைந்து வாய்விட்டு உரைக்கின்றார். “தானுரு வேட்கை கிழவன் முற்கிளத்தல் என்னும் காலை கிழத்திக் கில்லை” (தொல் பொரு : 118) என்பவாயினும் இங்கே தலைவனது திருமுன்பின்றித் தலைவி தானே தனித்து நின்று இவ்வாறு கூறுவது வழுவாகாது; மேலும் இது தலைவி கூறுவனவற்றை நற்றாய் கொண்டெடுத்து மொழிதலால் இஃது அமைதல் என அறிதல் வேண்டும்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4190. காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ
கண்டுகொள் கணவனே என்றாள்
ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்
உவந்திலேன் உண்மையீ தென்றாள்
பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த
பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்
மாதய வுடைய வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
உரை: தவம் செய்து பெற்ற வரத்தின் பயனாக எனக்குப் பிறந்த மகள் சிவபிரானை நோக்கி, “கணவனே! பெரிய அருட் பண்பையுடைய வள்ளலே! எனக்குக் காதல் வேட்கை வரம்பு கடந்து மிகுந்துளது; என்ன செய்வேன்; என் நிலைமையை நீயே கண்ணால் கண்டுகொள் என்று கூறுகின்றாள்; உன்னுடைய திருப்புகழை ஓதி மகிழ்வதன்றி வேறு ஒன்றையும் நான் விரும்புவதில்லை; இஃது உண்மை என மொழிகின்றாள்; பேதைப் பெண்ணாகிய எனக்கு வேறு புகலிடம் இல்லை; யான் செய்துள்ள பிழைகள் எல்லாவற்றையும் பொறுத்தருள்க என்று புகல்கின்றாள்” இதற்கு நான் என்செய்வது. எ.று.
நான் செய்த தவத்திற்கு இரங்கி, இறைவன் அருளிய வரப் பயனாக நான் ஈன்றெடுத்த மகள் எனத் தலைவியின் அருமையைப் புலப்படுத்தற்கு, “வரத்தினால் நான் பெற்ற மகள்” என்று நற்றாய் கூறுகின்றார். காதல் - காதல் வேட்கை. கைம் மிகுதல் - வரம்பு மீறிப் பெருகுதல். பெண்மைக்குரிய நாணமாகிய எல்லை கடந்து பெருகுவது; இதனை “இடங்கைக் காமம்” என்றும் கூறுவர். இக்கழி காமத்தை அடக்கியாளும் வழியில்லாதவளாக நான் இருப்பதை நீ நேரில் கண்டாலன்றிப் புலனாகாது என்பாள், “என் செய்வேன் எனை நீ கண்டு கொள்” என உரைக்கின்றாள். தனது உள்ளத் தன்மை இறைவனுடைய திருப்புகழைக் கேட்டு மகிழ்வதன்றி வேறு எதனாலும் மகிழுறுவதன்று என்பாளாய், “ஓதலுன் புகழேயன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மையீது என்றாள்” என நற்றாய் மகளது சொற்களைத் தான் எடுத்து மொழிகின்றாள். நின்னையொழிய வேறு எவரும் என் வேட்கை மெலிவினை நீக்க வல்லவராகார் என்பாள், “பிறிதோர் புகலிலேன்” என்றும், என்னைக் கூடி மகிழ்வித்தற்குத் தடையாகும் என் பிழைகளைப் பொறுத்தருள வேண்டுமென்று வேண்டுவாளாய், “செய்த பிழையெல்லாம் பொறுத்தருள் என்றாள்” என்றும், பிழை செய்தமைக்குக் காரணம் தனது பேதைமை என விளக்குவாளாய், “பேதை நான்” என்றும் வழங்குகின்றாள் என நற்றாய் வருந்தி உரைக்கின்றாள். அருளே திருவுருவாக உடைய வள்ளலாகிய சிவபெருமானைத் தன் காதல் மிகுதியால், “மாதயவுடைய வள்ளலே” என்று போற்றுகின்றார். (1)
|