4191.

     மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான்
          மறப்பனோ கனவினும் என்றாள்
     உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ
          உயிர்தரி யாதெனக் கென்றாள்
     கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக்
          கடலமு தளித்தருள் என்றாள்
     வயங்குசிற் சபையில் வரதனே என்றாள்
          வரத்தினால் நான்பெற்ற மகளே.

உரை:

     நான் பெற்ற வரத்தால் பிறந்த என் மகள், விளங்குகின்ற ஞானசபையில் நிருத்தம் புரிகின்ற அருளாளனே என்று மொழிந்து, வள்ளலே வேட்கை மிகுதியால் அறிவு மயங்கினேன் எனினும் உன்னை நான் கனவிலும் மறக்கமாட்டேன் என்று சொல்லுகிறாள்; காதல் வெம்மையால் மெலிந்தேன் எனினும் ஐயோ, நான் உன்னை மறப்பேனாயின் என் உடம்பில் உயிர் நில்லாது என இயம்புகிறாள்; மேனி கசங்கிச் சோர்ந்துள்ளேனாதலால் மேலும் அது கசங்காவண்ணம் உன்னுடைய கருணையாகிய கடலிடத்து எழும் இன்பமாகிய அமுதினைத் தந்தருள்க என்று வாய் வெருவுகின்றாள், என நற்றாய் வருந்தி உரைக்கின்றாள். எ.று.

     அறிவு மயங்கினமை மறதி இயல்பாக உளதாகுமாயினும் நான் மறப்பதில்லை என வற்புறுத்தற்கு, “மயங்கினேன் எனினும் கனவினும் மறப்பனோ” எனவும், மறந்த வழித்தான் இறந்து படுவேன் என்பாளாய், “மறந்திடில் ஐயோ உயிர் தரியாது எனக்கென்றாள்” எனவும் நற்றாய் இயம்புகின்றாள். உயங்குதல் - மெலிதல். கயங்குதல் - துவளுதல்; இது கசங்குதல் எனவும் வழங்கும். அருள் வெளியில் பிறக்கும் இன்பத்தை, “கருணைக் கடல் அமுதம்” என்று கூறுகின்றார். கடலமுது - கடல் கடையத் தோன்றிய அமுது என்பதாம்.

     (2)