4192. அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே
அன்பினால் அணைத்தருள் என்றாள்
பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்
படமுடி யாதெனக் கென்றாள்
செஞ்செவே எனது கருத்தெலாம் உனது
திருவுளம் அறியுமே என்றாள்
வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
உரை: சிவ வரத்தால் நான் பெற்றெடுத்த மகள், சிவபெருமானை வஞ்சமென்பதறியாத வள்ளற் பெருமானே என அழைத்து, இப்பொழுது நீ என்பால் வந்து அஞ்சவேண்டா என்று வாயால் மொழிந்து, அன்புடன் என்னைத் தழுவி அருள்க என்று மொழிகின்றாள்; காற்றிற் பறக்கும் பஞ்சு போலப் பறக்கின்றேனாதலால் இனியும் காதற் துன்பத்தை என்னால் தாங்க முடியாதே என மொழிகின்றாள்; என்னுடைய எண்ணம் எல்லாவற்றையும் உனது திருவுள்ளம் மிகவும் செம்மையாக அறியுமாதலால், காலம் தாழ்க்க வேண்டா என உரைக்கின்றாள் என்று நற்றாய் வருந்திக் கூறுகின்றாள். எ.று.
வஞ்சகம் புரிவது கீழ்மக்கள் செயலாதலின், “வஞ்சகம் அறியா வள்ளலே” என்று புகல்கின்றார். தனது காதல் வேட்கையின் பெருக்கம் விளங்க, “இத்தருணம் நீ வந்து அன்பினால் அணைத்தருள் என்றாள்” எனவும், அதனால் தான் இறப்ப மெலிந்தமை புலப்பட, “பஞ்சு போல் பறந்தேன் துன்பம் பட முடியாது எனக்கு என்றாள்”எனவும், யான் வாயால் சொல்லுதற்கு முன்பே என் எண்ண மிகுதியை பூரணமாக அறிவாய் என்பாளாய், “எனது கருத்தெல்லாம் உனது திருவுளம் செஞ்செவே அறியுமே என்றாள்” எனவும் இயம்புகின்றாள் என நற்றாய் வருந்திக் கூறுகின்றாள். கடையப்பட்ட பஞ்சு மென்மை மிகுந்து காற்றில் பறப்பது போல, வேட்கை மிகுதியால் அலைக்கப்பட்ட நான் எல்லை மீறிய மெலிவுற்றேன் என்பது தோன்ற, “பஞ்சுபோல் பறந்தேன்” என்று பகர்கின்றாள். செஞ்செவே என்பது மிகவும் செம்மையாக என்னும் பொருளது. “செஞ்செவே ஆண்டாய் சிவபுரத் தரசே” (வாழா) என்று மாணிக்கவாசகர் வழங்குவது காண்க. (3)
|