4193.

     பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப்
          புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
     காமிஎன் றெனைநீ கைவிடேல் காமக்
          கருத்தெனக் கில்லைகாண் என்றாள்
     சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ
          சற்றுநான் தரித்திடேன் என்றாள்
     மாமிகு கருணை வள்ளலே என்றாள்
          வரத்தினால் நான்பெற்ற மகளே.

உரை:

     வரப் பயனாக நான் பெற்றெடுத்த மகள் சிவபெருமானை நோக்கிப் பெருமை மிக்க கருணைபுரியும் வள்ளற் பெருமானே என்று வாயாரப் போற்றுகின்றவள் நிலத்தையோ பொருளையோ விரும்பாமல் உன்னைக் கூடிக் கலந்திடவே விரும்புகிறேன் எனவும், கீழான காமமுற்ற பெண் என்று என்னை நீ கைவிடலாகாது; அத்தகைய காமக் கருத்து எனக்கில்லை எனவும், தலைவனாகிய நீ என்பால் வரத் தாமதிப்பாயாயின் நான் சிறிதும் உயிர் தாங்கி இருக்கமாட்டேன் எனவும் நற்றாய் தன் மகள் கூறுவதை எடுத்து வருந்தி உரைக்கின்றாள். எ.று.

     உலகியல் மக்களுக்கு ஆசை தருவது பூமியும் பொருளும் பெண்ணுமாகிய மூன்றும் என்பர். அவற்றுள் கூற்று நிகழ்த்துபவர் பெண்ணாதலால், “பூமியோ பொருளோ விரும்பிலேன்” என்று புகல்கின்றாள். சிவயோகப் போகமே விரும்பப்படுவது என்றற்கு, “உன்னைப் புணர்ந்திட விரும்பினேன் என்றாள்” என்றும், நீ வெறுத்துக் கைவிடத் தக்க இழிந்த காமக் கருத்துடையவள் அல்ல என்பாளாய், “காமி என்றெனை நீ கைவிடேல் காமக் கருத்து எனக்கில்லை காண் என்றாள்” என்றும், தனது பொறுக்கமாட்டாத தன்மையை வெளிப்படுத்தற்கு, “நீ வரவு தாழ்த்திடில் சற்றும் நான் தரித்திடேன் என்றாள்” என்றும் நற்றாய் வருந்தி உரைக்கின்றாள். காமம் உடையவளைக் “காமி” என்கின்றார். சாமி - தலைவன். தாழ்த்திடல் - தாமதித்தல்.

     (4)