4194. அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
ஆசைமேற் பொங்கிய தென்றாள்
தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
சொலமுடி யாதெனக் கென்றாள்
மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
உரை: நான் பெற்ற வரத்தினால் எனக்குப் பிறந்த மகள், சிவனை நோக்கி, நான் உன்னை அடைந்து கூடிக் கலந்து இன்புற எனக்கு ஆசை மேன் மேலும் பொங்குகிறது என்று சொல்லுகிறாள் எனவும், அதனால் இனி என்னை யாரும் தடை செய்ய முடியாது; ஆகவே எனக்குத் தலைவனாகிய நீ சிறிது பொழுதும் தாமதித்தல் கூடாது என்று சொல்லுகின்றாள் எனவும், இவ்வுலகில் என்னைச் சூழவுள்ளவர்கள் பல சொற்களைத் தொடுத்து என்னைத் தூற்றுகின்றார்கள்; அவர்களுடைய அலருரையை நான் ஏற்று என் வாயால் மீளவும் என்னால் எடுத்துரைக்க முடியாது என்று சொல்லுகின்றாள் எனவும், என்னைத் தாக்குகின்ற வேட்கைத் துன்பத்தைப் போக்கி என்னை ஆண்டருள்க என்று வேண்டுகின்றாள் எனவும் நற்றாய் வருந்திக் கூறுகின்றாள். எ.று.
அடுத்தல் - அடைதல். சி்வயோகம் அனுபவித்தல் - சிவபோகம். சிவயோகப் போகத்தில் தன் உள்ளத்தில் பெருகிய ஆசையை, “அடுத்து நான் உன்னைக் கலந்து அனுபவிக்க ஆசை மேற் பொங்கியது என்றாள்” எனக் கூறுகின்றாள். சிவயோகப் போகத்திற்கு உரியதாயினாரை எவரும் எப்பொருளும் தடை செய்தல் இல்லையாதல் பற்றி, “தடுத்திட முடியாதே” எனத் தெளிய உரைக்கின்றாள். பெண்ணின் மேனி வேறுபாடும் வாய் வெருவுதலும் காணும் உலக மக்கள் உண்மை யுணராமையால் பல சொல்லித் தூற்றுவது இயல்பாதலால் அதனை எடுத்தோதி மகள் வருந்துகிறாள் என்பாளாய், “தொடுத்து உலகுள்ளார் தூற்றுதல் வாயால் சொல முடியாதெனக்கு என்றாள்” என நற்றாய் நவில்கின்றாள். இதனை ஈரமின் கூற்றம் ஏற்று அலர் நாணல் (தொல். பொ - 264) எனத் தொல்காப்பியம் குறிக்கின்றது. மடுத்தல் - ஈண்டுத் தாக்குதல் மேற்று. (5)
|