4196. பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
பொங்கிய தாசைமேல் என்றாள்
என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
என்னள வன்றுகாண் என்றாள்
கொன்செயும் உலகர் என்னையும் உனது
குறிப்பையும் குறித்திலார் என்றாள்
வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
உரை: பெற்ற வரத்தின் பயனாக நான் ஈன்ற மகள் சிவபிரானை நினைந்து காதல் தோன்றி மேலெழுந்து பொங்குகின்றதாதலால் பொன்னிறம் பொருந்திய நின்னுடைய திருமேனியைத் தழுவிக் கூட நினைக்கின்றேன் எனவும், அக் காதல் வேட்கை என்னைத் தனக்குள் விழுங்கிக்கொண்டு என் அளவில் நில்லாது பெருகுகின்றபடியால் யான் என்ன செய்வேன் எனவும், என் போன்றார்க்கு அச்சத்தை விளைவிக்கும் உலகத்துப் பெண்கள் என்னையும் உனது திருவுள்ளக் குறிப்பையும் அறிந்திலர் எனவும், வலிய அலர் உரைக்கும் அவர்களுடைய வாய் எப்பொழுது ஓயுமோ எனவும் கூறுகின்றாள் என, நற்றாய் வருந்தி உரைக்கின்றாள். எ.று.
சிவனுடைய திருமேனி பொன்னிறம் உடையதாதலால் சிவனை “பொன் செய நின் வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்” என்றும் நினைத்தபோது காதல் அன்பு பெருகினமை யுணர்த்த, ஆசை பொங்கி எழுந்து மேம்படுகின்றது என்பாளாய், “புணர்ந்திட நினைத்தேன் பொங்கியது ஆசை மேல் என்றாள்” என்றும் நற்றாய் நவில்கின்றாள். பொங்கி எழுந்த ஆசை அவள் உடம்பு முழுவதையும் கவர்ந்து கொண்டமை தெரிவித்தற்கு, “எனையும் விழுங்கியது என்னளவன்று காண்” என்று சொன்னாள் என நற்றாய் கொண்டெடுத்துக் கூறுகிறாள். கொன் - அச்சம். உனது குறிப்பு என்றது, உன்னுடைய திருவுள்ளக் கருத்து என்றதாம். அலர் தோன்றி நாட்டில் பரவாதபடி தடுக்க முடியாத வன்மையுடையது என்பாளாய், “வன்செயும் அவர் வாய் ஓய்வதென்று என்றாள்” என நற்றாய் அவலிக்கின்றாள். (7)
|