4197. மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு
மேவிலை என்னையோ என்றாள்
நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்
நல்லவர்க் கடுப்பதோ என்றாள்
மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற
வைத்தல்உன் மரபல என்றாள்
வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
உரை: பெற்ற வரத்தின் பயனாக நான் ஈன்ற மகள் சிவனை நினைந்து என்பால் வலிய வந்து கூடி நீங்கிய வள்ளலாகிய சிவனே! வேட்கை மிகுதியால் மனம் மெலிந்த என் மனக் கருத்தை அறிந்திருந்தும் நீ அருள் செய்கின்றாயில்லை; காரணம் என்னவோ; அறியேன் என்றும், வேட்கை நோயால் நான் வருந்துவது கண்டு இன்னும் பார்ப்போம் என்றிருத்தல் நற்பண்புடையவர்க்குப் பொருந்தாது என்றும், இவ்வுலகில் நிறைந்துள்ள பெண்கள் தம் வாயால் அலர் மொழிந்து என்னைத் தூற்றிப் பேசுமாறு வைத்தல் உன்னுடைய இயல்புக்கு ஒவ்வாது என்றும் கூறுகின்றாள் என நற்றாய் வருந்தி மொழிகின்றாள். எ.று.
உளம் மெலிவதாவது - மனவன்மை குறைதல். நலிதல் - வருந்துதல். பார்த்தும் என்பது உம்மீற்றுத் தனித்தன்மை வினைமுற்று. மலிதல் - நிறைதல். வாய்ப்பதர் - இல்லது புனைந்து பொய்யாக மொழிதல். தூற்றுதல் - சொல்லுதல். (8)
|