4198.

     ஒன்றிலேன் பிறிதொன் றுன்னருட் சோதி
          ஒன்றுற ஒன்றினேன் என்றாள்
     நன்றிலேன் எனினும் நின்திரு வடியை
          நம்பினேன் நயந்தருள் என்றாள்
     குன்றிலே இருத்தற் குரியநான் துயரக்
          குழியிலே இருந்திடேன் என்றாள்
     மன்றிலே நடஞ்செய் வள்ளலே என்றாள்
          வரத்தினால் நான்பெற்ற மகளே.

உரை:

     பெற்ற வரத்தால் நான் ஈன்றெடுத்த மகள், சிவபெருமானை நினைந்து, அம்பலத்தில் ஆடுகின்ற வள்ளற் பெருமானே! பிறிதொன்றனையும் மனத்திற் கொள்ளாமல் ஒன்றாகிய அருட்சோதியிற்றான் உள்ளம் ஒன்றிக் கலந்துள்ளேன் என்றும், நலமொன்றும் இல்லாதவளாயினும் உனது திருவடியையே விரும்பி இருக்கின்றேனாதலால் என்னை நயந்து ஏற்றருள்க என்றும், சிவானந்தமாகிய குன்றின் மேல் இருக்கும் உரிமையையுடைய யான் துன்பக் குழியில் இருந்து வருந்த மாட்டேன் என்றும் வாய் வெருவுகின்றாள் என நற்றாய் கவலுகின்றாள். எ.று.

     சிவபோகத்திலும் சிறந்தது வேறில்லாமையால், “பிறிது ஒன்றிலேன்” எனவும், மனம் முற்றும் சிவபோக வேட்கையே நிறைந்திருப்பது புலப்பட, “ஒன்றிலேன் பிறிதொன்று உன் அருட் சோதி ஒன்றுற ஒன்றினேன்” எனவும் தலைவி இயம்புகின்றாள். திருவடிப் பேற்றுக்கமைந்த நற்பண்பு தன்பால் இல்லை என்பாளாய், “நன்றிலேன்” என்றும், எனினும் திருவடி இன்பம் ஒன்றையே நாடுகின்றேன் என்பாள், “நின் திருவடியை நம்பினேன்” என்றும், எனவே என்னை ஆண்டருளல் வேண்டும் என்றற்கு, “நயந்தருள்” என்றும் அவள் கூறுகின்றாளாம். சிவஞான யோகப் பெருநிலையைக் “குன்று” எனக் குறிக்கின்றாள். இக் குன்றின்கண் இருந்து இன்புறற்பாலளாகிய யான் உலகியலாகிய துன்பக் குழியில் கிடந்து வருந்துவது பொருந்தாது என்பாளாய், “குன்றிலே இருத்தற்குரிய நான் துயரக் குழியிலே இருந்திடேன்” என எடுத்துரைக்கின்றாள். இவ்வாறு சொல்லி என் மகள் வாய் வெருவுகின்றாள் என்று நற்றாய் வருந்தியவாறாம்.

     (9)