59

59. பாங்கி தலைவி பெற்றி யுரைத்தல்

 

     அஃதாவது, தலைமகளின் வேட்கைப் பெருக்கத்தையும், அதனைப் பொறாது அவள் வாய் வெருவுதலையும் நற்றாய் உரைப்பக் கேட்டும் தானே நேரிற் கண்டும் கவன்ற தோழி, தலைமகனாகிய சிவபெருமான் திருமுன்படைந்து தலைவியின் ஆற்றாத அவல நிலையை அவற்குக் கூறுவதாம்.

4200.

     அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
          அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
     இம்மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த
          ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
     எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
          இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
     சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
          சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.

உரை:

     அம்பலத்தின்கண் அருள் நடம்புரியும் தனிப்பெருந் தலைவரே! அந்த மன்மதனாகிய காமவேள் தன்னுடைய கணைகளுள் ஒன்றோடமையாது ஐந்து அம்புகளையும் என் தலைவிமேற் செலுத்தி யுள்ளான்; உனது திருவருளைப் பெறும் அன்பு மிகுதியால் தனது அரிய வுயிரைத் தாங்கியிருக்கின்றாள்; இவ்வுலகவர் கூறும் செருக்குச் சிறிதும் உடையவளல்லள்; கூட்டத்தில் தோன்றுகின்ற தனிச் சிவபோகமாகிய பெருவெள்ளத்திற் படிதற்குக் கருத்து வேறுபாடு இலள்; எனினும், இவள் எச்சமயத்தைச் சார்ந்தவளோ, எக்குலத்தவளோ என்று அறிய விழைவீராயின், இவளுடைய சமயமும் குலமும் எல்லாம் சிவமயமேயாகும்; இது தேவரீர்க்கு உடன்பாடுதானே; உரைத்தருள வேண்டுகிறேன். எ.று.

     அம்மத வேள் என்பதில் அகரம், உலகறி சுட்டு. கணை - அம்பு. காமவேள் ஐவகை அம்புகளையுடையனாதலால், அவற்றுள் ஒன்றோடு நில்லாமல் ஐந்தனையும் சேர விடுத்துள்ளான்; அதனால் இறந்து படுதற் குரியளாயினும், நினது திருவருளின்பத்தைப் பெறும் ஆர்வம் அவளைக் காத்து நிற்கின்றது என்பாளாய், “அருளடையும் ஆசையினால் ஆருயிர் தான் பொறுத்தாள்” எனத் தோழி கூறுகின்றாள். “பொறுத்தாள்” என்பது, உயிர் தானும் அவட்குத் தாங்குதற்கரிய பாரமாயுளது என்ற குறிப்புணர நிற்கின்றது. இம்மதம் - இவ்வுலகவர் உரைக்கும் குற்றங்களில் ஒன்றான மதம். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற ஆறும் உலகவர் உரைக்கும் குற்றங்கள் என அறிக. குற்றமான மதம் சிறிதும் என் தலைவிபால் இல்லை என்பாளாய், “இம்மதமோ சிறிதும் இலாள்” எனவும், சிவபோகப் பேற்றையன்றி வேறு யாதும் கருதுவதிலள் என்றற்கு, “சிவபோக வெள்ளத்து இரண்டு படாள்” எனவும் இயம்புகின்றாள். சிவயோகத்தால் நுகரப் படுவதாதலால் சிவபோகத்தை, “கலவியிலே எழுந்த ஏக சிவபோகம்” என்று குறிக்கின்றாள். ஏகம் - ஒப்புயர்வில்லாதது. போகத்தின் இன்ப மிகுதியைப் புலப்படுத்தற்கு, “சிவபோக வெள்ளம்” எனச் சிறப்பிக்கின்றார். இரண்டு படுதல் - கருத்து வேறுபடுதல். சமயம் குலம் ஆகியவற்றில் என் தலைவி வேறாயவளோ என ஆய்தல் வேண்டா; சமயத்தாலும் குலத்தாலும் பிறவற்றாலும் இவள் சிவவுணர்வும் சிவவொழுக்கமும் சிவநெறியும் உடையவள் என்று வற்புறுத்தற்கு, “இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே” என்று தெரிவிக்கின்றாள். இவளை ஏற்றுக் கொள்ளற்குத் தேவரீர்க்கு இசைவு தானே எனக் கேட்கலுற்று, “சம்மதமோ தேவர் திருவாய் மலர வேண்டும்” எனத் தோழி வேண்டுகின்றாள். துரை - தலைவர்களைக் குறிக்கும் பெயர்ச் சொல்.

     இவ் வேண்டுகோள் இப்பகுதி முற்றும் பாட்டுத் தோறும் செய்யப்படுவதால், இனிவரும் பாட்டுக்கட்கும் கருத்து இதுவே எனக் கூறிக்கொள்க.

     (1)