4201.

     அங்கலிட்ட களத்தழகர் அம்பலவர் திருத்தோள்
          ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே
     பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கவிட்டுப் போனார்
          பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள்
     எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி
          இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே
     தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும்
          சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.

உரை:

     அம்பலத்தில் ஆடல் புரிகின்ற தனிப்பெருந் தலைவரே! இருண்ட கழுத்தையுடைய அழகராகிய அம்பலக் கூத்தராகிய சிவபிரானுடைய அழகிய தோள்களின் மேல் வைத்துள்ள ஆசையென்னும் பேய் இவளை விட்டுப் போக்கப்படுவதாய் இல்லையாதலால் சிறு தெய்வங்கட்குப் பொங்கலிட்டு வழிபாடு செய்த தாய்மார்கள் வழிபாடு பயன்படாமையால் வருத்த மிகுதியால் தங்கள் முகத்தைத் தொங்க விட்டுக்கொண்டு போய்விட்டார்கள்; பூவையாகிய தலைமகள் மகிழ்ச்சியால் மலர்ந்த பூப் போன்ற முகம் தெளிவுற்று உடல் புளகித்தாள்; எங்கள் விருப்பம் யாதெனில் நீ அவட்கு நின் திருவருளாகிய மங்கல நாணைச் சூட்டல் வேண்டும் என்பது; அன்றியும், இவளுடைய மனத்தைப் பேதுற விடாமல் ஒருமையுற்று விளங்க நின்னுடைய பேரின்பத்தை அடைவித்தல் வேண்டும் என்பதாகும்; தேவரீருடைய பெருவிருப்பம் யாதோ அதனை எமக்குத் தெரிவித்திடுக. எ.று.

     அங்கு - அசை; இஃது ஆங்கண் எனவும் வழங்கும். இதனை உரையசை என்றும் உரைப்பர். அல் - இருள். விட முண்டமையால் நிறம் கரிதாகிய கழுத்தையுடையவனாதலால் சிவனை, “அல்லிட்ட களத்தழகர்” என்று தோழி புகழ்கின்றாள். அம்பலவர் - கூத்தாடும் திருவம்பலத்தையுடைய சிவபெருமான். அம்பலவரான சிவபெருமானுடைய தோள் கண்டு காதலாற் கூடற்கெழுந்த ஆசை தலைவிபால் நீங்காது பெருகியிருப்பதறிந்து, தோழியரும் தாயரும் செய்த சூழ்ச்சிகளும் முயற்சிகளும் பயன்படாது கழிந்தமை பற்றி, “திருத்தோள் ஆசையெனும் பேயகற்றல் ஆவதிலை” என்றும், வேறு தெய்வ வழிபாட்டால் அதனை நீக்கக் கருதிப் பொங்கல் செய்து படைத்து வணங்கியும் நினைந்த பயன் எய்தாமையால் தாயரும் சுற்றத்தாரும் மனம் சோர்ந்து முகம் வாடித் தம் மனைகட்குச் சென்றனர் என்பாளாய், “பொங்கலிட்ட தாயர் முகம் தொங்கவிட்டுப் போனார்” என்றும், அவர் செயல் கண்டு மனம் வருந்திய தலைமகள், அவர்களது சூழ்ச்சி தோற்றதனால் உவகை மீதூர்ந்து உடல் பூரித்து முகம் மலர்ந்தாள் என்பாளாய், “பூவை முகம் பூமுகம் போல் பூரித்து மகிழ்ந்தாள்” என்றும் புகல்கின்றாள். தன் மனத்திருந்த காதலுண்மையை யுணராமல் தாயர் செய்த பொங்கற் பூசையும் வழிபாடும் தலைவிக்கு நாணத்தையும் வருத்தத்தையும் விளைவித்தமையின் தாயர் எய்திய சோர்வு தலைவிக்கு மகிழ்ச்சியுண்டுபண்ணியது என்பாளாய், “பூவை முகம் பூமுகம் போல் பூரித்து மகிழ்ந்தாள்” எனவுரைக்கின்றாள். பூவை - இளமை நலம் சிறந்த பெண். பூ முகம் - மலர்ந்த தாமரைப் பூவைப் போன்ற முகம். மங்கலம் - மங்கல நாண். இரண்டு படுதல் - ஐயத்தால் பேதுறுதல்; அலைதலுமாம். ஒன்றாக்கல் - ஒருமைக்கண் நிறுத்தல். இஷ்டம் - இட்டமென வந்தது. தங்கள் விருப்பத்தை எடுத்து முன்மொழிவது, கேட்போர் கருத்தை வெளியிடச் செய்யும் சூழ்ச்சி வகையாகும். திருவாய் மலர்தல் - வாய் திறந்து சொல்லுதல்.

     (2)