4202.

     பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும்
          பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள்
     இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால்
          எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம்
     மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள்
          மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள்
     தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
          சபையில் நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.

உரை:

     அம்பலத்தில் ஆடல் புரிகின்ற தனிப்பெருந் தலைவரே! பனம்பழமாயிருந்தாலும் உற்ற பசியைப் போக்குவதாயின் சாலும்; கிடைக்கிறதா? பார்மின் என்று பேசும் பெண்ணினத்தைச் சேர்ந்தவளல்லள் என் தலைவி; இப்பொழுதும் திருவருளின் மேலுற்ற பழைய மோகமே கொண்டிருக்கிறாள்; சிவானுபவத்திலன்றி வேறாய எவ்வகை யனுபவங்களிலும் அவட்கு விருப்பில்லை; திருவருட் செல்வராகிய தலைவருடைய திருவுள்ளம் என் பொருட்டுப் பழமோ காயோ, என்று அறிந்து வா என என்னை நின்பால் விடுத்துள்ளாள்; மற்ற மண்ணுலக மகளிரைப் போலக் காசுக்கும் பணத்துக்கும் ஆசைகொண்டு வருந்துபவளல்லள்; இவளது வருத்தம் பழமாய்ப் பயன்படுமோ, சொல்லுக. எ.று.

     பனம்பழம் மணமும் சுவையுமுடையதாயினும் எளிதில் உண்டு பசி நீக்கும் இயல்புடையதன்று; வலிய தோலும் நெடிய நாரும் கொண்டு உண்பார்க்கு வருத்தம் தருவதுபற்றிப் பனம்பழத்தை எடுத்துக் காட்டுகின்றார். உயர்ந்த திருவருட் சிவபோகத்தையன்றி இழிந்த பிறபோகப் பொருள்களை நாடுபவளல்லள் என்பது கருத்து. எழுதிய பாவை போன்ற இளமகளிரைப் பாவையர் என்பது நூல் வழக்கு. இன்னம் இனம் என வந்தது. திருவருட் சிவபோக மோகம் முன்னைப் பிறவிகளில் தோன்றி முதிர்ந்து வருவதாகலின், இப்பொழுதும் அது தொடர்ந்து போந்து இவள் மனத்தைக் கவர்ந்துகொண்டது என்றற்கு, “இனம் பழமோகம் கலந்தாள்” எனத் தோழி சொல்லுகின்றாள். “இறப்பில் தவத்தால் மருவுவனாம் ஞானத்தை வந்து” (சிவ. போதம். 8) என மெய்கண்டார் உரைப்பதறிக. மோகம், ஈண்டுத் திருவருட் சிவபோகத்தின் மேல் உண்டாகிய வேட்கை மிகுதி பற்றி வரும் பெரும் பற்று. சிவபோகத்தையன்றிப் பிறவற்றை நோக்கவிடாமையின், மோகம் என்று மொழிகின்றாள். சிவானந்த ஞானானுபவத்தாலன்றி இம் மோகம் வேறு எதனாலும் தீர்வதன்று என வற்புறுத்தற்கு, “சிவானுபவத் தல்லால் எந்த அனுபவங்களிலும் இச்சை யில்லாள்” எனக் கூறுகின்றாள். தான் விரும்பும் சிவபோகத்தை நல்குவாயோ அன்றி மறுப்பாயோ என்ற கவலை மிக்கு, உண்மை தெரிந்து வருக என என்னை நின்பால் தூது விடுத்தாள் என்பாளாய், “அவர் தம் மனம் பழமோ காயோ என்றறிந்துவர விடுத்தாள்” எனவும், பெண் மனம் பொன்னுக்கு மெலியும் என்பது பற்றி இவள் மனம் காசு பணத்துக்குக் கருத்தை இழப்பதன்று என்பாளாய், “மற்றவர் போற் காசு பணத்தாசை வைத்து வருந்தாள்” எனவும் எடுத்துக் கூறுகின்றாள். “எண்ணிப் பத்தங்கையிட்டால் இந்திரன் மகளும் ஆங்கே வெண்ணெய்க் குன்றெரியுற்றாற் போல்” மெலிந்து மனம் திரிவள் எனத் திருத்தக்க தேவர் உரைப்பர். தாம் பழமோ என்பதில் தனம் வருத்தம் குறித்து நின்றது. இவள் எய்தி வருந்தும் வருத்தம் இவட்கு விரும்பிய நற்பயனை விளைக்குமா என விளம்பியருளல் வேண்டும் என்பாள், “தனம் பழமோ தேவர் திருவாய் மலர வேண்டும்” எனத் தோழி வேண்டுகின்றாள்.

     (3)