4203.

     புல்லவரே பொய்உலக போகம்உற விழைவார்
          புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார்
     கல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால்
          கனவிடையும் பொய்யறவு கருதுகிலாள் சிறிதும்
     நல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை
          நன்குமதி யான்இவளை நண்ணஎண்ணம் உளதோ
     வல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும்
          வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.

உரை:

     விளங்குகின்ற அம்பலத்தின்கண் வாழ்கின்ற பெரிய தலைவரே! அற்பர்களே நிலையில்லாத மண்ணுலக போகத்தைப் பெறுதற்கு விரும்புவர்; சிவ புண்ணியம் செய்த ஞானிகள் சிவ போகத்தைப் பெறுதற்கு விரும்புவர்; இவருட் புல்லர்களைக் கற்போன்றவரெனவும், புண்ணியரை மணி போல்பவரெனவும் தெரிந்து கொண்டாளாதலால், கனவின்கண்ணும் நிலையாத பொய்யுறவுகளைச் சிறிதும் நினையாமல், நற்பண்புடையோரைக் காணினும் அவர்கள் சிவபெருமானாகிய நின்னை எண்ணாதவராயின், அவர்களை நல்லவர்களாக இவள் மதிக்கின்றாளில்லை; என் தலைவியாகிய இவளையடைதற்கு நுமக்குத் திருவுள்ளம் உண்டோ? எல்லாம் வல்ல பெருமானே, எனக்குச் சொல்லியருள வேண்டுகிறேன். எ.று.

     புல்லறிவாளரைப் புல்லர் என்றும், புல்லியோர் என்றும் கூறுவது பற்றிப் “புல்லவர்” எனத் தோழி கூறுகின்றாள். நிலையாமை பற்றி, உலக போகம், “பொய்யுலக போகம்” எனப்படுகிறது. பொய்யுலக போகத்தை விரும்புபவரைக் கல்லவர் என்றும், சிவபோகம் வேண்டுபவரை மணியென்றும் தெரிதலால், எங்கள் தலைவி அறிவறிந்தவளென்றும், அவள் கனவிலும் பொய்யுலக போகம் விரும்புவோரை மனத்தாற் கருதாத திண்மையுடையவள்; ஆகவே. அவள்பாற் போந்து கூடுதல் வேண்டும் என உரைப்பாளாய், “இவளை நண்ண எண்ணம் உளதோ” எனவும், நுமது இசைவைத் தெரிவித்தல் வேண்டும் என்பாள், “நுமது திருவாய் மலர வேண்டும்” எனவும் விண்ணப்பிக்கின்றாள். பொய்யுறவு - நிலையில்லாத தொடர்பு.

     (4)