4204.

     தத்துவருந் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும்
          தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார்
     எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாராள்
          இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே
     ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே
          ஓதுகின்றாள் இவள் அளவில் உத்தமரே உமது
     சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும்
          சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே.

உரை:

     ஞான சபையிலும் பொற் சபையிலும் நடம்புரிகின்ற பெரிய பெருமானே! தத்துவ ஞானிகளும் தத்துவங்களை வகுத்துக் காட்டும் தலைவர்களும், மற்றவர்களும் தனித்தனியாகத் தாமே இவள் கண்ணெதிரே வந்து நிற்கின்றார்கள்; இவளோ அவர்களை ஒரு சிறிதும் கண்ணெடுத்துப் பாரா தொழிகின்றாள்; இரு கண்களிலும் நீர் பெருக நின்று, என் உயிர்க்கு நாயகனே, மனமொத்து உயிரோடுயிராய்க் கலந்துகொண்டு என்னைத் தனக்கு உடைமையாகக் கொண்டருளிய பெருமானே, என்று உம்மையே நினைந்து ஓதியவண்ணம் இருக்கின்றாள்; இவள்பால் உமது திருவுள்ளம் யாதெனத் தெரிவித்தருள வேண்டுகின்றேன். எ.று.

     தத்துவர் - தத்துவங்களையுணர்ந்த அறிஞர். தத்துவம் செய் தலைவர்; ஆன்ம தத்துவம் இவை, வித்தியா தத்துவங்கள் இவை, சிவ தத்துவங்கள் இவை, தாத்துவிகங்கள் இவை எனத் தத்துவ வகைகளின் உண்மை கண்டு தொகுத்தும் வகுத்தும் விரித்தும் காட்டும் சான்றோர்.பிறர் என்றது தத்துவங்களை இயக்கும் தேவர்கள். தத்துவ ஞானத்தைப் பொருளாக மதியாமல், சிவஞான யோகச் சிவபோகத்திலே அழுந்திய ஆர்வமுடையவளாக இருக்கின்றாள்; அதனால் நும்மையே நினைந்து, நும்முடைய நலங்களையே ஓதிய வண்ணம் இருக்கின்றாள் எனத் தோழி கூறுகின்றாள். பொற்சபை - பொன் வேய்ந்த சபை.

     (5)