4205.

     அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
          அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
     என்னைஉனக் கிருக்கின்ற ே­தகுகஎன் றுரைப்பாள்
          இச்சைஎலாம் உம்மிடத்ே­த இசைந்தனள்இங் கிவளை
     முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
          முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளே­தல்
     மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
          வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.

உரை:

     விளங்குகின்ற அம்பலத்தில் எழுந்தருளும் பெரிய தலைவரே! எட்கட்கு மன்னிய அருளரசே! பெற்ற தாய் தன்பால் வரக் கண்ட தலைவி, அம்மா, நீ அம்பலவாணராகிய என் கணவர்க்கு அன்பு மிக்க அடியவளாயின் என்பால் நெருங்கி வருக; அல்லாதவளாயின், இவ்விடத்து உனக்குத் தொடர்பு ஏதும் இல்லையாம், செல்க; என மறுக்கின்றாள்; இவளுடைய விருப்பமெல்லாம் நும் பேரிலேயே ஒன்றியிருத்தலால், இவளை முன்போல் ஒரு பேதைப் பெண்ணென்று கருதி இவள்பால் போதருதற்குக் காலம் தாமதித்தல் கூடாது; தாமதித்தால் இவள் தனது உயிரை வருத்தி இறந்துபடுவாள்; விரைந்து வருவது திருவுள்ளமாயின், அதனை எனக்குத் தெரிவித்தருள வேண்டுகிறேன். எ.று.

     நீ என்பால் வர வேண்டா எனத் தாயை விலக்கும் கருத்தினளாகலின், “இங்கே என்னை உனக்கு இருக்கின்றது ஏகுக” என்று நயமாக மொழிகின்றாள். இவ்வாறு மறுத்தற்குக் காரணம் தன் விழைவு முற்றும் நின்பால் ஒன்றியிருப்பதே என்பாள், “இச்சையெலாம் உம்மிடத்தே யிசைந்தனள்” எனக் கூறலுறும் தோழி, தலைவியின் முதுக்குறைவைப் புலப்படுத்தற்கு, “இவளை முன்னையள் என்று எண்ணாதீர்” என இசைக்கின்றாள். முன்னையள் - விளையாடும் பருவத்துச் சிறு பெண்; பேதைப் பெண் எனவும் அமையும், காமஞ் சாலா இளம் பெண்ணைப் பேதை என்பர். விரைந்து வருவது கருத்தாயின் எனக்குத் தெரிவித்தருள்க; இல்லையேல் ஒன்றும் வேண்டா என்ற குறிப்பினால், “கடுகி வரல் உளதேல்” என்று கூறுகின்றாள்.

     (6)