4206. கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது
கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள்
இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை
இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள்
வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது
மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும்
விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள்
மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
உரை: மெய்ம்மையாகிய அம்பலத்தில் நடம்புரிகின்ற மிக்க பெருந்தலைவரே! மனத்தில் வஞ்சமில்லாத அம்பலவாணராகிய என் கணவரைக் கண்களாற் கண்டாலன்றி யான் கண்ணுறங்க மாட்டேன்; உணவும் உண்ணேன்; மகிழ்ச்சி கொள்ளேன் எனவுரைக்கும் என் தலைவி, இரவென்றும் பகலென்றும் நோக்குவதிலள்; எதிரே வருபவர்களையும் இன்னாரென்று அறிவதில்லை; துன்பமேயுற்று வருந்துகின்றாள்; உமது வருகையையே எதிர்பார்த்து இரங்குகின்றாள்; இத்தகைய தலைவிபால் உம்முடைய எண்ணம் யாதோ? அதனை எனக்குத் தெரிவித்தருளுக; இனி ஒரு கணப்பொழுது தாமதிக்கிலும் இவள் உயிர் தாங்கமாட்டாள்; என் செய்வேன். எ.று.
நெஞ்சின்கண் மறைந்து கிடத்தலால் வஞ்சகம், கரவு எனப்படுகிறது. வருந்தியவண்ணம் இருத்தல் கண்டு தன்னைத்தேற்ற வருபவர்க்குத் தலைவி “களித்து அமரேன்” என விடை பகர்கின்றாள். இன்னல் - துன்பம். உழக்கின்றாள் - உழல்கின்றாள் என்பன துன்பம் உறுகின்றாள் என்னும் கருத்தில் வழங்குகின்றன. நுமது அன்பு வருகை யொன்றையே உயிராகக் கொண்டுள்ளாள் என்பாளாய், “விரவும் ஒரு கணமும் இனித் தாழ்க்கில் உயிர் தரியாள்” எனத் தோழி தலைவியது ஆற்றாமையை விளம்புகின்றாள். நீரலைபோலப் பொழுது கணந்தோறும் கழிதலால், “விரவும் ஒருகணமும்” என விதந்து கூறுகின்றாள். (7)
|