4207. ஊராசை உடலாசை உயிர்பொருளின் ஆசை
உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது
பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்
பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ
நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள்
நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில்
நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும்
நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே.
உரை: நிலைபேறுடைய அழகிய அம்பலத்தின்கண் எழுந்தருளும் பெரிய தலைவரே! ஊர் மேலாசை, உடம்பின் மேல் ஆசை, உயிர்மேல் ஆசை, பொருளாசை, உற்றவர் பெற்றவர்கள்பால் உள்ள ஆசை ஆகிய ஆசையொன்றும் என் தலைவிக்கில்லை; உம்பால் உண்டாகிய ஆசையொன்றே கொண்டு பேய்க் கோட் பட்டவள் போல வருந்துகின்றாள்; கள்ளருந்திப் பிதற்றுபவர்களைப்போலப் பித்துக் கொண்டவளாய் இடையறவின்றிப் பேசுகின்றாள்; உமது திருப்பெயரையன்றி வேற்றவர் பெயர் செவியில் விழின், நாராசம் பாய்ந்தது போல் துடித்து வருந்துகிறாள்; இவை யாவும் நாடறிந்தனவாகும்; இவள்பால் உமக்கு அன்புளதாயின் அதனை எனக்கு உரைத்தருள வேண்டுகிறேன். எ.று.
நிலைபேறுடைய தென்பது பற்றி அம்பலத்தை, “நித்திய மாமணி மன்று” என்று சிறப்பிக்கின்றாள். ஊராசை - பிறந்த ஊர் மேல் உளதாகும் ஆசை. உற்றவர் - நண்பர்; பெற்றவர் - தாய் தந்தையர். துன்பம் தருவதாகலின், பேராசயைப் பேய் என்றும் குறிக்கின்றாள். சொல்லியதையே பன்முறையும் சொல்லுவது விளங்க, “கள்ளுண்டு பிதற்றும் பிச்சியெனப் பிதற்றுகின்றாள்” எனக் கூறுகின்றாள். பித்து, பிச்சு என வழங்குதலுண்மையின், பித்துடையவளைப் “பிச்சி” எனக் குறிக்கின்றாள்; பித்தி - பிச்சிப் பூ என வழங்குவது காண்க. நாராசம் - இரும்புக் கம்பி, நலிதல் - வருந்துதல். உம்பால்கொண்ட ஆசை மிகுதியால் வேற்றவர் பெயர் கேட்கவும் வருந்துகின்றாள் என்பாள், “பிறர் பெயர் கேட்டிடிலோ நாராசம் செவி புகுந்தா லென்ன நலிகின்றாள்” எனவும், இது மறைபொருளன்று, பலரும் அறிந்த தென்றற்கு, “நாடறிந்தது இது” எனவும் இயம்புகின்றாள். (8)
|