4208. என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க
இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித்
தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்
தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்
அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்
அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள்
மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்
மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
உரை: சத்திய ஞானசபையில் நடம் புரிகின்ற, மிகவும் பெரியவராகிய தலைவர், என்னுடைய உயிரோடுயிராய்க் கலந்து கொண்டார், ஆயினும் அவர் என்பால் வருவாராயின், அவர் இருந்தருளுதற்கு ஓர் இடங்கண்டு தூய்மை செய்க என எங்களைப் பணிக்கின்றாள்; சிவபோக வேட்கையே தனது மயமாகித் தன்னுடைய உயிரையும் உடம்பையும் மறந்தொழிந்தாள்; ஓரிடத்தில் இருப்பதோ, படுத்திருப்பதோ செய்யாமல் எழுந்தெழுந்து ஒருபால் தனியாகச்சென்று உலாவுகின்றாள்; சோறுண்ண அழைத்தாலும் செவியிற் கேளாமல், உலகில் பெண்களெல்லாரும் கண்டு அதிசயிக்கும்படியான குணங்கள் பலவற்றைக் கொண்டுள்ளாள்; மின்னற்கொடி போன்ற இடையை யுடைய என் தலைவியாகிய இவளை விரும்புகின்றீராயின், அதனை வாய் திறந்து சொல்லிவிட வேண்டுகிறேன். எ.று.
சிவபெருமானாகிய தலைவர்க்கும் தனக்குமுள்ள தொடர்பை யுணர்த்தற்கு, “என்னுயிரிற் கலந்துகொண்டார்” என்று கூறுகின்றாள். புனைதல் - தூய்மை செய்து கோலமிட்டு அழகு செய்தல். இச்சை - சிவபோக வேட்கை. உட்கரணங்களாகிய மனம் முதலியன யாவும் சிவானுபோக வேட்கை மயமாய் விட்டமையின் தன்னுடைய உயிரையும் அவ்வுயிர் நின்ற வுடம்பையும் நினையாமை தோன்ற, “தன்னுயிர் தன்னுடல் மறந்தாள்” என்று தோழி எடுத்தோதுகின்றாள். உள்ளத்தே இச்சை யுருவாகியபோது செயலறவு படாது உடம்பை சும்மாவிருக்கவிடாது இயக்கிய வண்ணம் இருக்குமாதலின், “இருந்தறியாள் படுத்தும் தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்” எனத் தோழி மேலும் கூறுகின்றாள். உலகியற் காதல் வயப்பட்ட மகளிரிடத்து இன்ன மெய்ப்பாடுகள் உளவாவதைத் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலிற் கூறுவது காணலாம். பசியற நிற்றல் அம்மெய்ப்பாட்டில் ஒன்றாதலால், “அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள்” என்று இயம்புகின்றாள். அணங்கனையார் - மகளிர். அணங்கு - தெய்வமகள். அவள் போல்வதால் மகளிரை, “அணங்கனையார்” என வழங்குகின்றனர். தம்பால் இல்லாத குணஞ் செயல்களைத் தலைவிபால் உலகத்து மகளிர் காண்பதால் அதிசயிக்கின்றனர் என்பது கருத்து. தலைவியின் பெற்றிகளைக் கூறினேன்; நினது கருத்தை யுரைத்தருள்க என்பாளாய், “விழைவதுண்டேல் வாய் மலரவேண்டும்” எனத் தோழி விண்ணப்பிக்கின்றாள். (9)
|