60. தலைவி வருந்தல்

    அஃதாவது, தான் நினைந்தவாறு தன்பால் தலைவன் போந்து இன்னருள் செய்யாமையை எண்ணிக் காரணம் யாதாகலாம் எனப் பலவாறு நினைந்து வருந்துவதாகும்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4210.

     பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ
          பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ
     இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ
          என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்
     சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள்
          தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள்
     நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார்
          நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.

உரை:

     பருவம் நிரம்பாத குறைபாட்டினாலோ, ஊழ்வகையினாலோ, பழக்கமில்லாமையினாலோ, தீவினையினாலோ, இருவகையான மாயையினாலோ, ஆணவ மலத்தினாலோ, என்னாலோ, பிறராலோ, எதனாலோ இன்னதனால் என்றறியேன்; நேசப் பான்மையின்றி என் மனமாகிய தோழி எனக்குப் பகையாகி விட்டாள்; தனிச் சிறப்புடைய பரையாகி சிவசத்தி என்னும் செவிலித் தாயும் என் முகத்தைப் பார்க்கின்றாளில்லை; நிலையுடைய இளம் பெண்கள் எல்லாரும் என்னைப் பார்த்து வல்லாங்கு பேசுகிறார்கள்; எல்லாம் அறிந்தவராகிய எங்கள் கூத்தப் பெருமானுடைய திருவுள்ளத்தை நான் அறிந்தேனில்லை; என்ன செய்வேன். எ.று.

     சிவயோக போகத்துக்குரிய ஞான மில்லாமை தோன்ற, “பருவமிலாக் குறையோ” எனப் பகருகின்றாள். செய்வினைக்கேற்ற பயன்களை விளைமுதலுக்குப் பகுத்தளிக்கும் சிறப்புடைமை பற்றி ஊழ் வினையை, “பகுதி” என்று கூறுகின்றாள். படிற்று வினை - துன்பம் தரும் தீவினை. இருவகை மாயை - சுத்தம் அசுத்தம் என இருவகைப்படும் மாயை. இம்மாயைகளும் ஆன்மாவை மயக்குவனவாதலால், “இருவகை மாயையினாலோ” என்றும், ஆணவ மலம் உயிரறிவை மறைப்பதாதலால், “ஆணவத்தினாலோ” என்றும் விளம்புகின்றாள். சருவதி - நேசப் பான்மை. பாங்கி - தோழி. பரை - பரனுடைய அருட் சக்தி அருட் சத்தியின் துணையால் உயிரறிவு வளர்ச்சி பெறுதல் பற்றி அதனை, பரை யெனும் வளர்த்த தாய்” என்று கூறுகிறாள். கேவலத்தில் மலவிருளில் புதைந்து கிடக்கும் ஆன்மாவை மாயையோடு கூட்டி உலகில் வாழச் செய்தலால் பரையாகிய சிவசத்தியை, வளர்த்த தாய்” என்று உரைக்கின்றாள். நிருவம் - நிலைபேறு.      இளமையால் அறியாமை நிறைந்த பெண்களை, “நிருவ மடப் பெண்கள்” என்று குறிக்கின்றாள். வாயில் வந்தபடி நீக்க மாட்டாத அலரைக் கூறுவதால், “வலது கொழிக்கின்றார்” என்று சொல்லுகிறாள். வலது - வல்லாங்கு உரைக்கும் சொல். இது வல்லுரை எனவும் கூறப்படும். நிபுணர் - எல்லாம் நுணுகி அறிந்தவர். எனக்கருளும் வகையில் கூத்தப் பெருமான் யாது நினைக்கின்றாரோ அதனை என்னால் அறிய முடியவில்லை என்பாளாய், “நடராயர் நினைவை அறிந்திலனே” என இயம்புகின்றாள்.          

     (1)