4211.

     அம்பலத்ே­த திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
          அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி
     எம்பலத்ே­த எம்மிறைவன் என்னைமணம் புரிவான்
          என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
     வம்பிசைத்ே­தன் எனஎனது பாங்கிபகை யானாள்
          வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்
     நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்
          நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.

உரை:

     அம்பலத்தில் திருக் கூத்தாடுகின்ற திருவடியாகிய தாமரையை என் தலைமேல் அணியுமாறு முன்பு சில சொற்களால் வேண்டினேன், அதனாலோ; என்னைச் சூழவுள்ள மகளிரிடத்தே எனக்கு இறைவனாகிய சிவபெருமான் என்னை மணந்துகொள்வான் என்று கூறினேன். அதனாலோ, வேறு எதனாலோ எனக்குத் தெரியவில்லை; வம்பு மொழிந்தேன் என்று என்னுடைய தோழியும், வேறுபாட்டால் என்னை வளர்த்தெடுத்த செவிலித் தாயும் என்னை அன்புடன் பார்க்க மறுக்கின்றனர்; என்னுடைய ஆய மகளிர் எல்லாரும் வேப்பம் பழமாயினர்; எல்லாம் வல்லவராகிய எங்கள் நடராசப் பெருமான் என்ன நினைக்கின்றாரோ அறியிலேன். எ.று.

     அம்பலம் - தில்லையம்பலம். அம்பலவாணருடைய திருவுள்ளக் குறிப்பறியாமல் என் தலைமேல் அவருடைய திருவடியை வைத்தருளுமாறு வேண்டிச் சில சொற்களால் முறையிட்டேன் என்பாளாய், “அடி மலர் என் முடிமேல் அணிந்திட முன் சில சொன்னேன்” என்றும், ஏனைய மகளிரிடத்தே என்னுடைய இறைவனாகிய அவர் என்னை மணம் புரிந்து கொள்வார் என்று பல சொன்னேன் என்பாள், “எம்பலத்தே எம்மிறைவன் என்னை மணம் புரிவன் என்று சொன்னேன்” என்றும் கூறுகின்றாள். எவ்வளம் என்பது எம்பலம் என வந்தது. வம்பு - வீண் பூசல் விளைவிக்கும் சொல். முகம் மலர்ந்து பார்த்தல் - அன்பு கனிய நோக்குதல். மற்றையர்கள் - தன்னோடு விளையாடும் ஆயமகளிர். நிம்பமரம் - வேப்ப மரம். காயானார் என்று உரைக்கின்றாள்.

     (2)