4212.

     கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
          கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி
     எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்
          என்றுரைத்ே­தன் இதனாலோ எதனாலோ அறியேன்
     பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்
          பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள்
     மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்
          வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே.

உரை:

     இரவில் உறங்காத யான் உறங்கின போதெல்லாம் என் கணவராகிய அவரோடு கலந்து மகிழும் கனவன்றி வேறில்லை என்று தோழியரிடத்துச் சொன்னேன் அதனாலோ, எண்ணம் ஒடுங்காத நிலவுப் பொழுதில் அவர் இருக்குமிடத்தை அடைவேன் என்று சொன்னேன் அதனாலோ, வேறு எதனாலோ காரணம் அறிகிலேன்; அவர் என்பால் வந்திலர்; என் தோழியும் பெண்ணாகிய இவள் அடங்குவதில்லை என்று சொல்லி முகங் கடுகடுத்தாள்; பேரன்புடன் என்னை வளர்த்த தாயும் மனம் வருந்தி அயலவள் போல் ஒழுகுகின்றாள்; மற்ற ஆயமகளிர் அனைவரும் ஊர் எல்லை கடந்து ஏனைய ஊர்களிலெல்லாம் பறக்கும் படியாகப் பழி கூறுகின்றார்கள்; வள்ளலாகிய நடராசப் பெருமானுடைய திருக்குறிப்பு யாதோ அறிகிலேன். எ.று.

     கண்ணுறங்கல் - கண் மூடித் தூங்குதல். இழித்தக்க கனவு காணின் அதனைப் பிறர்க்கு உரைக்கலாகாது என்பது அறமாதலின் நான் உரைத்தமை பற்றி என்னை வெறுக்கின்றார் போலும் என அஞ்சுகின்றேன் என்பாளாய், “கண்ணுறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவன்றி இலை என்றேன் அதனாலோ” எனக் கவல்கின்றாள். எண்ணுறங்கா நிலவு - எண்ணங்கள் ஒடுங்காத நிலவுக் காலம். நிலவு விளங்கும் இரவுப் பொழுதில் காதலர் உள்ளம் காதல் உணர்வால் ஒடுங்காமல் விரிந்து மிகுவதாகலின், “எண்ணுறங்கா நிலவு” என எடுத்துரைக்கின்றாள். நிலவு திகழும் இரவுக் காலத்தில் காதலர் உள்ள இடமறிந்து தனித்துச் செல்வது அடங்கா ஒழுக்கமாதலின் அக்குற்றம் காரணமாக காதலர் என்பால் வந்திலர் எனக் கட்டுரைக்கின்றாளாதலால், “எண்ணுறங்கா நிலவில் அவர் இருக்குமிடம் புகுவேன் என்றுரைத்தேன்” எனத் தனது குற்றத்தை வெளிப்படுத்துகின்றாள். தனது அடங்கா ஒழுக்கம் கண்டு தோழி சினந்தமை புலப்படுத்தற்கு, “பெண்ணடங்காள் எனத் தோழி பேசி முகங்கடுத்தாள்” எனவும், எனது செயலும் சொல்லும் தனக்கு வருத்தம் விளைவித்தமையின் அன்புடன் பேணி வளர்த்த செவிலியும் மனம் வெறுத்து எனக்கு அயலவர் போல மாறியுள்ளாள் என்பாளாய், “பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்து அயலாளானாள்” எனவும் கூறுகின்றாள். வருந்தயலாள் என்பதில், வருந்து என்னும் வினை முதனிலை எச்சப் பொருளில் வந்தது. அயல் மகளிர் எடுத்தோதும் அலர் ஊர் முழுதும் பரவி எல்லை கடந்து விட்டது என்ற ஏக்கத்தால், “மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்” என்று சொல்லி வருந்துகிறாள்.

     (3)