4213. எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால்
எனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்றஅத னாலோ
இல்லாமை எனக்கில்லை எல்லார்க்குந் தருவேன்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி
களித்தெடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்குடனே
செல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார்
சித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே.
உரை: என் கணவர் எல்லாவற்றையும் இனிது செய்ய வல்லவர் என்று சொல்வேனாயின், அஃது எனக்கு ஒன்றாகவும், நினக்கு ஒன்றாகவும் இருத்தல் இல்லை; எல்லார்க்கும் பொதுமொழி என்று கூறினேன், அதனாலோ; ஒன்றும் இல்லாமை என்பால் இல்லை; எல்லார்க்கும் வேண்டுவன தருவேன் எனவுரைத்தேன்; இதனாலோ வேறே எதனாலோ அவர் வந்திலர்; என் தோழியும் கல்வி கல்லாதவர் போல என்னைத் தன் முகங்கடுத்து நோக்குகின்றாள்; என்னை மகிழ்ந்து ஏந்தியெடுத்து வளர்த்த செவிலியும் தோழியோடொத்த கருத்தினளாகின்றாள்; ஏனை ஆய மகளிர் ஒவ்வாத சொற்கள் சிலவற்றைச் சொல்லி இகழ்கின்றனர்; என் சித்தத்தில் இருப்பவராகிய, நடராசப் பெருமானுடைய திருவுள்ளத்தை யான் அறிகின்றிலேன். எ.று.
வரம்பிலாற்றல் உடையவர் எனச் சிவாகமங்கள் உரைப்பது பற்றிச் சிவபெருமானை, “எல்லாம் செய் வல்ல துரை” என்றும், “என் கணவர்” என்றும் கூறினால், அஃது எல்லார்க்கும் ஒத்த பொருளுரை யாவதன்றி, என் கணவர்க்கே உரியதாகாது என்பது அன்புக் குறைவு என்ற குற்றத்தை உரைப்பவர்பால் உறுவித்தலால், “எனக்கும் ஒன்று நினக்கும் ஒன்றா என்ற அதனாலோ” எனத் தலைவி எண்ணுகின்றாள். இல்லாமை - வறுமை. “எல்லார்க்கும் தருவேன்” என்பது, செல்வச் செருக்குடைமையாகிய குற்றமுண்மை தோற்றுவித்தலால், “எல்லார்க்கும் தருவேன் என்று சொன்னேன், இதனாலோ எதனாலோ அறியேன்” எனச் சொல்லித் தலைவி புலம்புகின்றாள். கல்லாதவர் மனத்தின்கண் தெளிவில்லாமையால் அவர் முகத்தில் ஒளியும் பொலிவும் இல்லாமை பற்றி, “கல்லார் போல் என்னை முகம் கடுத்து நின்றாள் பாங்கி” என்றும், தோழி போலவே செவிலியும் வேறுபடுவது தெரிவித்தற்கு, “களித்தெடுத்து வளர்த்தவளும் அங்குடனே கலந்தனள்” என்றும் மொழிகின்றாள். செல்லாமை - தகுதிக்கும் நிலைமைக்கும் ஒவ்வாமை. சிரிக்கின்றார் - எள்ளியிகழ்கின்றார். மடவார் - இளமகளிர்; இவர்கள் ஆயமகளிர் என அறிக. சித்தர் - சித்தத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான். சித்தம் - திருவுள்ளக்குறிப்பு. (4)
|