4214. இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
எச்சமயத் ேதவரையும் இனிமதிக்க மாட்டேன்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.
உரை: தாம் விரும்பியது அனைத்தையும் குறைவற இயற்ற வல்லவராகிய சிவபெருமான் என்னை, மணந்து கொண்டதால் ஏடி, தோழி, எனக்கு ஒப்பாவார் யாவர் என்று பெருமிதம் தோன்றப் பேசினேன்; அதனாலோ; அன்றி, வேறு எவ்வகைச் சமயத்தவர் சொல்லும் எத்தகைய தேவர்களையும் இனி யான் பொருளாக மதிக்க மாட்டேன் என்று புகன்றேன்; இதனாலோ வேறே எதனாலோ தலைவர் என்பால் வந்திலர் என எண்ணுகின்ற தலைவி, தன் தோழி தன்னை எட்டி மரத்தின் பழம் போலக் கருதி மனம் வெறுக்கின்றாள்; என்னை விரும்பியெடுத்து வளர்த்த செவிலியும் கசந்த சொற்களைக் கூறுகின்றாள்; ஏனை ஆயமகளிரும் அச்சமாகிய பெண்மைப் பண்பு இல்லாதவள் என்று என்னை அலர் உரைக்கின்றார்கள்; பெருமை கொண்ட நடராசப்பெருமானுடைய திருவுள்ளம் யாதோ அறிகிலேன் என்று சொல்லி வருந்துகிறாள். எ.று.
இச்சை - விருப்பம். நினைத்தது நினைத்தாங்கு முடிக்கும் பேராற்றல் சிவன்பால் உண்மை கூறுதற்கு, “இச்சை யெல்லாம் வல்ல துரை” எனவும், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெரும் தலைவராதலின், அவரை மணந்துகொண்ட தனக்கு நிகராவார் ஒருவருமில்லை என்பது விளங்க, “ஏடி எனக்கு இணையெவர்கள் என்றேன்” எனவும், இது தன்னை வியந்து தருக்குதல் என்ற குற்றமாதல் பற்றி என்பால் வந்திலர் போலும் என்பாளாய்த் தலைவி வருந்துகின்றாள். “வியவற்க எஞ்ஞான்றும் தன்னை” (குறள்) எனத் திருவள்ளுவர் உரைப்பதறிக. எம்மதத்தையும் சம்மதமாகக் கருதுதல் சமரச சன்மார்க்க நெறியாக, அதற்கு மாறுபட்டு, “எச்சமயத் தேவரையும் இனி மதிக்க மாட்டேன் என்று சொன்னேன்” எனத் தலைவி கவல்கின்றாள். நச்சுமரம் - எட்டிமரம். கனியாகியவிடத்தும் கசப்புத் தன்மை மாறுவதில்லையாதலால், “நச்சுமரக் கனி போல” என நவில்கின்றாள். நயத்தல் - விரும்புதல். வளர்த்தவள் - செவிலி. குற்றத்தை மறைக்காமல் எடுத்தோதுவது பற்றி, “கயந்தெடுத்துப் புகன்றாள்” என்று இயம்புகின்றாள் தலைவி. அண்ணல் - பெருமை. (5)
|