4215.

     வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா
          வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி
     எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்
          என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
     அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த
          அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள்
     நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்
          நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.

உரை:

     எவரையும் வஞ்சிக்கும் தன்மையில்லாத தலைவராகிய சிவபிரானுக்கு, மாலையணிந்து மணந்து கொண்டேனாதலால், நல்வாழ்வனைத்தும் என் வாழ்வாம் என்றும், நிலைபேறு பெற்று யான் உலக மக்களைப் போல இறந்தும் பிறந்தும் வருந்தமாட்டேன் என்றும் சொன்னேன்; அதனாலோ வேறு எதனாலோ, இன்னும் என்பால் வந்திலர்; அதனால் என் தோழி எனக்கு அச்சமுண்டாக என்னைப் பார்க்கின்றாள்; என்னை வளர்த்த தாயாகிய செவிலியும் தோழி போலவே என் முகத்தைப் பாராதொழிகின்றாள்; வலிய நெஞ்சு படைத்த அயற் பெண்டிர் பலரும் நெடிது பேசி என்னை எள்ளி நகையாடுகின்றார்கள்; கூத்தப்பிரானாகிய நடராசப் பெருமானது திருவுள்ளக் குறிப்பை யறியாமல் வருந்துகிறேன். எ.று.

     வஞ்சனை, சூது முதலிய தீய பண்புகளேயில்லாத பெருமானாதலின் சிவபிரானை, “வஞ்சமிலாத் தலைவர்” எனவும், அவரை மணந்து கொண்டமை புலப்பட, “மாலையிட்டேன்” எனவும், அதனால் நல்வாழ்வனைத்தும் தனக்கு எய்தினமை விளங்க, “எல்லா வாழ்வும் என்றன் வாழ்வென்றே” எனவும் தலைவியுரைக்கின்றாள். இது தன் வாழ்வை நினைந்து தருக்குதலாகிய குற்றமாம். எஞ்சல் - நிலைபெறுதல். பிறப்பிறப்புக்களைத் துறந்தமை கூறலும் தருக்கின்பாற் படுதலின், “இதனாலோ எதனாலோ” எனத் தலைவி நினைந்து துயர்கின்றாள். அஞ்சு முகம் காட்டல் - அச்சுறுத்தல். வளர்த்த அன்னை - வளர்த்த தாயாகிய செவிலி. அப்படியாதல் - தோழியின் இயல்புடையளாதல். நெஞ்சுரத்த பெண்கள் வன்னெஞ்சமுடைய அயற் பெண்டிர். நீட்டுதல் - நீளப் பேசுதல். நிருத்தர் - கூத்தாடும் பெருமான்.

     (6)