4216.

     அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மலர் அடித்ே­தன்
          அருந்துகின்றேன் எனஉரைத்ே­தன் அதனாலோ அன்றி
     என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே
          என்றுரைத்ே­தன் இதனாலோ எதனாலோ அறியேன்
     துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்
          துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்
     நென்னல்ஒத்த பெண்கள்எலாம் கூடிநகைக் கின்றார்
          நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.

உரை:

     மனையவர் உணவு கொள்ள என்னையழைத்தாராக, அசைகின்ற மலரையெடுத்து அவர்மீது எறிந்து உணவு பின்பு உண்கின்றேன் எனப் பொய் மொழிந்தேன்; அக் குற்றத்தாலோ; எனக்கு உயிரொத்த கணவரோடு கூடுதற்கேற்ற இடம் எங்கேயுளது என நாணமின்றி வினாவினேன்; அதனாலோ வேறு எதனாலோ தலைவர் என்பால் வாராமைக்குக் காரணம் அறிகிலேன்; பொருந்திய செந்நெறிக்கண் யான் செல்லுதற்குரிய துணைபுரியும் தோழி என்னை வெறுக்கின்றாள்; என்னையெடுத்துத் தெளிவுற வளர்த்த செவிலியும் முகம் சோர்ந்து நீங்கினாள்; நேற்று என்னைக் கண்ட என்னையொத்த இளமகளிர் தம்மிற் கூடிக்கொண்டு என்னை எள்ளி நகைக்கின்றார்கள்; முற்றுணர்வுடையவராகிய கூத்தப்பெருமானது திருவுள்ளக் குறிப்பை அறிந்திலேன்; என் செய்வேன். எ.று.

     உண்ணும் காலமறிந்து மனைமகளிர் அழைப்பைக் கண்ட யான் உடன் செல்லாமல் எதிரே, கொம்பிற் பூத்தாடிய மலரைக் கொய்து அவர் மேல் எறிந்தேன் என்பாள், “அன்னமுண அழைத்தனர் நான் ஆடும் மலர் அடித்தேன்” என்றும், வற்புறுத்தினவர்க்கு நான் பின்பு உண்பேன், இப்போது பசியில்லை எனப் பொய் கூறினேன் என்பாளாய், “அருந்துகின்றேன் என வுரைத்தேன்” என்றும், தலைவியுரைக்கின்றாள். மலரெறிந்தது வன்செயலும், பின்பு அருந்துகின்றேன் என்றது பசியில்லையெனப் பொய் கூறலுமாய்க் குற்றம் படுதலை நினைந்து, “இதனாலோ எதனாலோ அறியேன்” என்று தலைவி அவலிக்கின்றாள். அவ்வப்போது அறிவும் நெறியும் தந்து சிறப்பிப்பவளாதலால் தோழியை, “துன்னு நெறிக்கொரு துணையாம் தோழி” எனக் கூறுகின்றாள். தாயாய்ப் பேணி அறிவு தெளிவிப்பவளாதலால், செவிலியை “துணிந்தெடுத்து வளர்த்தவள்” எனச் சிறப்பிக்கின்றாள். துணிதல் - தெளிதல். தனது காதலொழுக்கத்தால் அறிவு தடுமாறும்போது தலைவிக்குச் செய்யத்தகுவது இதுவென நன்னெறி கண்டு தெளிவிப்பவளாதலால் செவிலியை இவ்வண்ணம் உரைக்கின்றாள் எனினும் பொருந்தும். நிபுணர் - முற்றறிவுடைய முனைவர்.

     (7)