4217.

     பொதுநடஞ்செய் துரைமுகத்ே­த தளதளஎன் றொளிரும்
          புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி
     இதுவரையும் வரக்காணேன் தடைசெய்தார் எவரோ
          எனப்புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
     புதுமுகங்கொண் டெனதுதனித் தோழிமனந் திரிந்தாள்
          புரிந்தெடுத்து வளர்த்தவளும் புதுமைசில புகன்றாள்
     மதுவுகந்து களித்தவர்போல் பெண்கள்நொடிக் கின்றார்
          வள்ளல்நட ராயர்திரு உள்ளமறிந் திலனே.

உரை:

     அம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற சிவபெருமானுடைய திருமுகத்தின்கண் தளதளவென்று ஒளிசெய்யும் புன்சிரிப்பு ஒன்றே எனக்குப் பொருளாவது என அறுதியிட்டு உரைத்தேன்; அதனாலோ; அன்றி அவர் இப்பொழுது காறும் வரக் காணாமையால் அவரைத் தடை செய்தவர் எவரோ என்று வருந்தி மொழிந்தேன்; அதனாலோ வேறு எதனாலோ அவர் வாராமைக்குக் காரணம் யாதோ அறியிலேன்; எனது ஒப்பற்ற தோழியும் வேறு வகையான பார்வை கொண்டு மனம் வேறுபடுகின்றாள்; அன்புடன் என்னையெடுத்து வளர்த்த தாயாகிய செவிலியும் புதுப்புதுச் சொற்களைச் சொல்லுகின்றாள்; ஏனை அயல் மகளிரும் கள்ளுண்டு மயங்கினவர் போலச் சில சொற்களை உரைக்கின்றார்கள். வள்ளலாகிய நடராசப் பெருமானுடைய திருவுள்ளக் குறிப்பையும் நான் அறியாமல் வருந்துகிறேன். எ.று.

     பொது - தில்லையம்பலம். துரை - தலைவனாகிய நடராசப் பெருமான். முகத்தில் புன்னகை தவழும்பொழுது கூத்தப்பெருமானுடைய பொன்னிறம் கொண்ட முகத்தின்கண் இன்பவொளி சிறப்பதால், “முகத்தே தளதள என்றொளிரும் புன்னகை” என்று புகழ்கின்றார். சிவனது வரவைத் தடுக்க வல்லவர் எவ்வுலகிலும் எவரும் இலராதலால் அவரது பெருமைக்குச் சிறுமையுண்டாகுமாறு, “தடை செய்தார் எவரோ எனப் புகன்றேன்” என வருந்துகின்றாள். யான் உரைத்தது காரணமாக அவர் மனம் வேறுபட்டு வாராதிருக்கின்றாரோ என ஐயுற்று வருந்துகின்றமை புலப்பட, “இதனாலோ எதனாலோ அறியேன்” என இயம்புகின்றாள். மகிழ்ச்சியால் மலர்ந்து விளங்கும் முகம் வருத்தத்தால் சாம்பி இருந்தமையால் எனது தனித் தோழி புது முகம் கொண்டு “மனந் திரிந்தாள்” எனவும், இதுகாறும் அன்பு மொழிகளையே உரைத்துவந்த செவிலியும் வன்மை மொழிகள் சிலவற்றைப் பேசித் தனது மனவேறுபாட்டைத் தெரிவித்தமை தோன்ற, “புதுமை சில புகன்றாள்” எனவும் எடுத்துரைக்கின்றாள். தலைவியின் வேறுபாட்டைக் கண்ட அயல் மகளிர் முன்னும் பின்னும் வேறு வேறு அலர் மொழிகளைப் பேசுகின்றனர் என்பாளாய், “மது வுகந்து களித்தவர் போல் பெண்கள் நொடிக்கின்றார்” எனத் தலைவி மனம் மெலிந்து சொல்லுகின்றாள். உகத்தல் - ஈண்டு உண்ணுதல் மேற்று. நொடித்தல் - சொல்லுதல்.

     (8)