4218. கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்
கரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி
எண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே
இருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
விண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி
வியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள்
பண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார்
பத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே.
உரை: கண்வழி நுழைந்து என் கருத்தைக் கவர்ந்துகொண்ட கள்வராகிய சிவபெருமான் என்னைக் கூடிக் கலந்த சமயத்தில், கலவிக்குரிய கரண வகைகளை யான் அறியேன் என்று சொன்னதனாலோ; அன்றி என் நெஞ்சால் நான் நினைத்த போக வகைகள் எல்லாம் நினது சிவபோகத்திலே ஒன்றி இருக்கின்றன என்று யான் இயம்பியதனாலோ வேறு எதனாலோ அப் பெருமான் என்பால் வாராமைக்குக் காரணம் அறிகிலேன்; இந்நிலையில் என்னை நோக்கிய தோழியும் வானத்தில் திகழும் முழுமதி போன்ற தன் முகம் ஒளி குன்றி வேறுபடுகின்றாள்; என்னைப் பாராட்டி வளர்த்த செவிலியும் வேறுபட்டுச் சில சொற்களை உரைக்கின்றாள்; இசை கலந்த சொற்களைப் பேசும் ஆயத்தவர்களான இளமகளிர் பலத்த சொற்களைக் கூறுவாராயினர்; என் செய்வேன்; அன்பர்கள் புகழ்கின்ற நடராசப் பெருமானுடைய திருவுள்ளம் யாதோ அறிகிலேன். எ.று.
கண்ணெதிரில் தோன்றித் தமது இனிய காட்சியைத் தந்து என் உள்ளத்தைச் சிவபெருமான் கவர்ந்து கொண்டார் என்பாளாய், அப்பெருமானை, “கண் கலந்த கள்வர்” எனக் குறித்துரைக்கின்றாள். கரணம் - போக நுகர்ச்சியில் கை நகத்தாலும் வாயின் பற்களாலும் செய்யப்படும் செயல்வகை. இவற்றை “நகக்குறி” எனவும், “பற்குறி” எனவும் போக நூலார் புகழ்ந்துரைப்பர். தனக்குக் கரண வகை தெரியாமைக்குக் காரணம் தன்னுடைய எண்ணமெல்லாம் சிவபோக நுகர்ச்சியில் ஒன்றியிருந்தனை என்பாளாய், “எண் கலந்த போகமெல்லாம் சிவபோகந் தனிலே இருந்த தென்றேன்” எனத் தலைவி இயம்புகின்றாள். விண்ணில் ஒளிரும் முழுமதியை இளமகளிரின் முகத்துக்கு ஒப்புக் கூறுபவாதலால் அம்முகம் வேறுபட்டுச் சுழித்து நோக்கினமை விளங்க, “விண் கலந்த மதி முகந்தான் வேறுபட்டாள் பாங்கி” எனவும், தலைமகளின் சீர்களையும் சிறப்புக்களையும் எடுத்தோதிப் பாராட்டி மகிழ்விப்பது செவிலியின் சிறந்த செயலாதலின் அவளை, “வியந்தெடுத்து வளர்த்தவள்” எனவும், அன்பே மொழிந்தொழுகும் செவிலி தலைவியின் செயல் வேறுபாடு கண்டு மனத்தில் சினந்தமை தெரியுமாறு, “வேறு சில புகன்றாள்” எனவும் விளம்புகின்றாள். மடவார் - இளமகளிர். இனிய சொற்களைச் சொல்லும் இயல்பினர் என்பதற்கு, “பண் கலந்த மொழி மடவார்” எனப் பகருகின்றாள். பத்தர் - மெய்யன்பர்கள். சித்தம் - திருவுள்ளம். (9)
|