4219.

     மாடமிசை ஓங்குநிலா மண்டபத்ே­த மகிழ்ந்ே­தன்
          வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி
     ஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா
          தென்றுரைத்ே­தன் இதனாலோ எதனாலோ அறியேன்
     ஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழிமுகம் புலர்ந்தாள்
          எனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள்
     நாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
          நல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.

உரை:

     மாடத்தின் மேல் அமைந்துள்ள அரமியத்தின்கண் இருந்து வள்ளலாகிய சிவபெருமானோடு கூடி நான் இன்புற்றேன் என்று வாய்விட்டுரைத்ததனாலோ; அன்றி ஒப்புக் கூற முடியாதது யான் அவர்பால் பெற்ற இன்பம் என்று நாணமின்றி மொழிந்ததனாலோ வேறு எதனாலோ அவர் என்பால் இன்னும் வரவில்லை; இதழ் விரிந்த பூக்களை அணிந்த கூந்தலையுடைய பெண்ணாகிய தோழி அருவருப்புற்று முகம் விளித்தாள்; என்னை யெடுத்து வளர்த்த தாயாகிய செவிலியும் என்பால் இரக்கமின்றிப் பேசலானாள்; ஏனை ஆயமகளிர் பலரும் தம்மிற் கூடி ஊரறியும்படியாக எள்ளி நகையாடுகின்றார்கள்; நல்லவராகிய நடராசப் பெருமானுடைய கருத்தில், முடிவு யாதோ அறிகிலேன். எ.று.

     தனது பெருமனையின்கண் மாடத்தின் மேல் தென்றலும் நிலவொளியும் ஒருங்கமையக் கட்டப் பெற்ற நிலாமுற்றத்தை “மாடமிசை ஓங்கு நிலா மண்டபம்” என்று கூறுகின்றாள். இதனை அரமியம் என்றும் வழங்குவர். மாலைப்பொழுதில் இளங்காதலர்கள் கூடி மகிழும் இடம். பிறர்க்கு எடுத்துரைத்து மகிழும் சிறப்புடைய செயலன்மையும் தெரியாது உரைத்த குற்றத்தினாலோ அன்றி அவருடன் கூடிக் கலந்த கலவின்பமும் அப்பெற்றியது என்பதறியாது எடுத்துரைத்த குற்றத்தினாலோ வேறு எதனாலோ தலைவர் என்பால் வந்திலர் என வருந்துகின்றேன் என்பாள், “மாடமிசை ஓங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தேன் வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி ஈடறியாச் சுகம் புகல என்னாலே முடியாதென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்” என்று தலைவி கூறுகின்றாள். ஈடறியாச் சுகம் - ஒப்புக் கூறமுடியாத இன்பம். ஏடு - மலர் இதழ். குழல் - கூந்தல். கோதை - இளம்பெண். என்னுடைய கூற்று பெண்மைக்குரிய நாணத்தின் எல்லை கடந்து கைக்காமத்தினாள் இவள் என்று தோன்றலுண்மையின், தோழியும் செவிலியும் என் நிலைமை கண்டு, இரக்கமில்லாதவராயினர் என்பாள், “தோழி முகம் புலர்ந்தாள்” என்றும், “வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள்” என்றும், “பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார்” என்றும் தலைவி கூறுகிறாள். ஊரறிந்தது நாடறியப் பரவுமாதலால், “நாடறியப் பெண்களெலாம் கூடி நகைக்கின்றார்” என்று நவில்கின்றாள். கருத்தின் எல்லையாதலால், “கருத்தெல்லை அறிந்திலேன்” என்று கூறப்படுகிறது.

     (10)