4220. கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முழுதும்
கணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி
இற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம்
என்றுரைத்ேதன் இதனாலோ எதனாலோ அறியேன்
பொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே
புரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள்
சொற்பூவைத் தொடுக்கின்றார் கால்கள்களை யாேத
துன்னுநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
உரை: என் மேனி முழுதும் கற்பூரத்தின் மணம் நிலவுவது கண்டு வினவிய தாயார்க்கு அது எனது கணவனுடைய மேனி மணம் என்று நாக்கூசாது மொழிந்தேன், அதனாலோ; மனையின்கண் கால் நிலந்தோய நடந்ததனால் அடி கன்றியது என்று உரைத்தேன், அதனாலோ; வேறு எதனாலோ; காதலராகிய சிவபெருமான் என்பால் வந்திலர் போலும்; வேறு காரணம் அறியேன்; இந்நிலையில் என் தோழி அழகிய பூப்போன்ற தன் முகம் நாணி நெற்றி முழுதும் வியர்வை அரும்பினாள்; செவிலியாகிய வளர்த்த தாயும் பொலிவுடைய தன் முகம் கரிந்தாள்; அயல் மகளிரும் அம்பலை விடுத்துச் சொற்களாகிய அலரெடுத்து மொழிகின்றனர்; யான் யாது செய்வேன்; என்னைக் கூடுபவராகிய நடராசப்பெருமானுடைய கருத்தின் எல்லை யாதோ, அறிகிலேன். எ.று.
சிவபோகானுபவத்தால் தலைவி மேனியில் உளதாகிய சிவமணத்தை அறிந்த தாயர் மருண்டு வினாவினாராக, அதற்கு விடை கூறலுற்ற தலைமகள் தன் மேனி மணத்துக்குக் காரணம் இதுவென்பாள், “கற்பூரம் மணக்கின்றது என் மேனி முழுதும் கணவர் மணம் அது வென்றேன்” என்று கூறுகின்றாள். கற்பூர மணம் - சிவ மணம் எனப்படும். சிவபோகம் நுகரும் சிவயோகிகளின் திருமேனியில் கற்பூர மணம் கமழும் என்று அறிந்தோர் கூறுகின்றனர். பூவினும் மெல்லியதாகிய என் திருவடி கன்றிச் சிவந்தமைக்குக் காரணம் யான் அவர்பால் தனித்து நடந்து அடைந்தமை என்பாளாய், “இற்பூவை அறியும் அடி நடந்தவண்ணம்” என்று இசைக்கின்றாள். பொற் பூ - அழகிய பூ. பூவின் முகம் என்றவிடத்து இன் - ஒப்புப் பொருட்டு. நாண மிகுதி புலப்படுத்தற்குத் தோழி “பூ முகம் வியர்த்தாள்” என அறிக. செவிலி முகம் கரிந்தமைக்குக் காரணம் உள்ளத்திற் தோன்றிய வெகுளியாகும். சொற் பூ - சொல்லாகிய அலர். கால் களைதல் - முகிழாகிய அரும்புகளை விலக்குதல். முகிழ் ஈண்டு அம்பல் மேற்று. செவியோடு செவி கேட்ப மெல்ல மொழிதல் அம்பல்; பிறரும் கேட்பப் பேசுதல் அலர். “அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள்” (குறள் - 1115) என வருவது காண்க. துன்னுதல் - கூடுதல். (11)
|