4221.

     மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே
          வழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ
     இன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன்
          என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
     மின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள்
          மிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள்
     அன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார்
          அத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.

உரை:

     பெருமை பொருந்திய தில்லையம்பலத்தின் நடுவே விளங்குகின்ற எனக்கு மணவாளனாகிய கூத்தப் பெருமானோடு வழக்கிட்டு வலப்பக்கமாகிய சிவத்தைப் பெற்றேன் என்று நான் உரைத்ததனாலோ, இன்னமும் அவருடைய முகத்தில் தவழும் இளநகையைக் காணச் செல்வேன் என்று நான் சொன்னதனாலோ, வேறு எதனாலோ, இன்னும் என்பால் அவர் வாராமைக்குக் காரணம் அறிகிலேன் என்று சொன்னேனாக, மின்னற் கொடியைப் போன்ற இடையையுடைய என் தோழி மனம் வேறுபட்டு என்னிடமிருந்து ஒருவிதமாக நடந்து சென்றாள்; மிக்க அன்புடன் என்னை வளர்த்தவளாகிய செவிலியும் பெருமூச்சு விட்டுக்கொண்டு பெயர்ந்து சென்றாள்; அன்னம் போன்ற நடையையுடைய ஆயமகளிர் எல்லாம் சிறுமையுணர்த்தும் சொற்களை சொல்லிக்கொண்டார்கள்; தலைவனாகிய நடராசப் பெருமானுடைய திருவுள்ளக் குறிப்பை நான் அறிகின்றிலேன். எ.று.

     மன்னு சபை - பெருமை பொருந்திய தில்லையம்பலம். மணவாளன் - மணந்து கொண்ட கணவன். வலது - சிவனுடைய இடப்பாகம் அருட் சத்தியாதலால் வலது என்பது சுத்த சிவமாகிய வலப்பாகத்தைக் குறித்தது. வதனம் - முகம். இளநகை - புன்சிரிப்பு. வலது பெற்றேன் என்பதும், வதன இளநகை காணச் செல்வேன் என்பதும் மிகைப்ப மொழிதல் என்னும் குற்றத்தின்பால் படுவதால், “இதனாலோ எதனாலோ அறியேன்” எனத் தலைவி உரைக்கின்றாள். மின்னொத்த இடையையுடையவள் என்றற்கு, “மின்னும் இடைப் பாங்கி” எனக் கூறுகின்றாள். மனத்து அன்பு திரிந்து பிரிந்து சென்றாள் என்பாளாய் “ஒருவிதமாக நடந்தாள்” என உரைக்கின்றாள். செவிலி வெகுண்டு நீங்கினமை விளங்க, “வெய்துயிர்த்துப் போனாள்” என விளக்குகின்றாள். சின்னமொழி - சிறு சொற்களால் இகழ்ந்த மொழி. சித்தம் -திருவுள்ளம்.

     (12)