4222. கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே
கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ
எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர்
என்றுரைத்ேதன் இதனாலோ எதனாலோ அறியேன்
உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி
உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள்
துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார்
சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
உரை: கள்ளுண்டு மயங்கினாள் என்று சொல்லுகின்றீர்கள்; யானோ பொற் சபையின் நடுவிடத்தே சிவமாகிய கள்ளைக் கண்டதன்றி உண்டதில்லை என்று மொழிந்தேன்; அன்றியும் இகழப்பட்ட ஏனை மக்களைப் போல் என்னை நினைத்தல் வேண்டா என்று தலைவர் முன் எடுத்துரைத்தேன்; இதனாலோ வேறு எதனாலோ அவர் என்பால் வந்திலர்; காரணமும் அறிகிலேன் என்று சொன்னேனாக, கேட்டிருந்த என் தோழி தன் உள்ளத்திற் கொண்டிருந்த மகிழ்ச்சியெல்லாம் நீங்கி வெறுத்த முகத்துடன் ஒதுங்கி நின்றாள்; உவப்புடன் என்னை வளர்த்த செவிலியும் சினமுற்றுக் கண் சிவந்து நீங்கினாள்; துள்ளி விளையாடுகின்ற ஆயமகளிர் பலரும் தம்மிற் தாம் கூறிக்கொண்டு ஏதேதோ பேசுகின்றார்கள்; இந்நிலையில் தூயவராகிய நடராசப் பெருமானுடைய திருவுள்ளத்தை அறியாது வருந்துகிறேன். எ.று.
காதலன்பால் மயங்குகின்ற என்னைக் கண்டு, கள்ளுண்டாள் போலும் என என்னை இகழ்கின்றீர்கள் என்பாளாய்த் தலைவி, நடராசப் பெருமானை நோக்கி, “கள்ளுண்டாள் எனப் புகன்றீர்” என்று மொழிகின்றாள். அதனோடு நில்லாமல் என் காதலன்புக்கு இடமாய்ப் பொற் சபையின் நடுவே எழுந்தருளும் சிவஞானாமிர்தமாகிய உம்மைக் கண்டதுண்டே தவிர, கலந்து உண்டதில்லை என்று பகர்ந்தேன் என்பாளாய், “கனக சபை நடுவே கண்டதலால் உண்டதில்லை” என்று இயம்புகின்றாள். எதிர்மாற்றம் கொடுத்தமை நினைந்து வருத்தமுற்று அது காரணமாக, சிவபிரான் தன்பால் வந்திலரெனத் தடுமாறுகின்றாளாதலால், “அதனால் அவர் வந்திலர் போலும்” என்று சொல்லித் துயர்கின்றாள். தன்னை மற்றவர்போல் இகழத்தக்க இயல்பினர் என நினைத்தல் வேண்டா என்று அந்த எதிர்மாற்றத்தின் மேலும் உரைத்தது சிவபிரானுக்கு மனத்தின்கண் வெறுப்பு செய்துவிட்டது போலும் என்று எண்ணி வருந்துகின்றமை இனிது விளங்க, “எள்ளுண்ட மற்றவர்போல் என்னை நினையாதீர் என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்” என்று தலைவி சொல்லுகிறாள். யான் கூறிய இதனைக் கேட்ட தோழி என் சொற்களின் பொருந்தாமை கண்டு மனமகிழ்ச்சி துறந்து என்னை வெறுத்து நோக்கினாள் என்பாளாய், “உள்ளுண்ட மகிழ்ச்சியெலாம் உவட்டி நின்றாள் பாங்கி” என்று உரைக்கின்றாள். உவட்டுதல் - வெறுத்து நீக்குதல். வளர்த்தவள் - செவிலி. சிவந்த கண்ணளானாள் என்பது சினத்தால் கண் சிவந்தாள் என்னும் பொருளதாம். விளையாட்டு ஆயமகளிர் என்பது தோன்ற, “துள்ளுண்ட பெண்கள்” என்று சொல்லுகின்றாள். நொடித்தல் - பேசுதல். தூய்மையின் உருவாதலின் கூத்தப்பெருமானை, “சுத்தர் நடராயர்” என்று புகழ்கின்றாள். (13)
|