4223.

     காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது
          கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி
     ஏரிகவாத் திருஉருவை எழுதமுடி யாே­த
          என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
     காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி
          கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்ே­த
     நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்
          நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.

உரை:

     அழகிய பெண்களே! என் கணவருடைய அழகினைக் காண்டற்கு வருக என அழைத்தேன், அதனாலோ; அழகு புலராத அவருடைய திருவுருவை ஓவியத்தெழுதவொண்ணாது என்று அம்மகளிர்க்கு எடுத்துரைத்தேன்; அதனாலோ, வேறு எதனாலோ என் கணவர் என்பால் இன்னும் வாராமைக்குக் காரணம் அறிகிலேன்; இவ்வாறு யான் உரைக்கக் கேட்ட தோழி கரிய கூந்தல் குலைந்து வீழச் சினம் மிக்கு என் பக்கனின்றும் எழுந்து நீங்கினாள்; கண் குளிர நோக்கி எடுத்து வளர்த்த செவிலியும் தன் மனம் புண்பட்டு வருந்தினாள்; ஒப்பற்ற ஆயமகளிரும் என்னொடு வேறுபட்டுப் பூசலிடுவாராயினர்; கூத்தப் பிரானாகிய நடராசப் பெருமானுடைய திருவுள்ளக் கருத்தையும் யான் அறியேனாயினேன், என் செய்வேன். எ.று.

     காரிகை - இளம் பெண். சிவபெருமானது கண் கொள்ளாப் பேரழகைக் கண்டு ஆராமையால் தலைவி ஏனைப் பெண்களுக்கும் அவரது அழகைக் காட்டி இன்புற நினைத்தமையின், “காரிகையீர் எல்லீரும் எனது கணவர் அழகினைக் காண வம்மின்” என்றும், அப்பெருமானது திருவுருவைத் தன் மனக்கிழியில் எழுத மாட்டாமை விளங்க, “ஏரிகவாத் திருவுருவை எழுத முடியாதே என்று சொன்னேன்” என்றும் தலைவியுரைக்கின்றாள். தன் கணவனது பேரழகைப் பிற மகளிர் காண்பதை நன்மகளிர் விரும்பாராக, அவரைக் காணுமாறு தலைவியழைத்தது குற்றம். திருவுருவை எழுத முடியாதென்றது, ஓவியப் புலமையுற்றிருந்தும் மனத்தின்கண் அவ்வுருவை நன்கு பதியக் கொளாதொழிந்தமையைப் புலப்படுத்திக் குற்றப்படுத்திற்று. இவ்வாற்றால் அவர் வாராதொழிந்தாரென்பாள், “இதனாலோ எதனாலோ அறியேன்” எனத் தலைவி வருந்துகிறாள். ஏர் இகத்தல் - அழகு வாடுதல். நன்மகட்குரிய நற்பண்பு குன்றுதல் கண்ட தோழி சினம் மிகுந்து வெய்துயிர்த்து மெய் நடுங்கினமை விளங்க, “கார் இகவாக் குழல் சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி” எனவும், செவிலியின் வருத்தத்தை, “வளர்த்தவளும் உளத்தே புண் பொறுத்தாள்” எனவும் இயம்புகின்றாள். நிருத்தர் - திருநடம் புரிபவர். அயற் பெண்டிர் வேறுபட்டமை தோன்ற, “போர் இகவா தெடுத்தார்” எனக் கூறுகின்றாள். போர் - ஈண்டுப் பூசல் மேற்று.

     (14)